இறந்த பிறகும் இறவாத பிரச்சனை: சுடுகாட்டு பாதை கேட்டு மக்கள் மறியல்
சுடுகாட்டு பாதை பிரச்சினை சம்பந்தமாக கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ளது, வீரளூர் ஊராட்சி. இங்குள்ள அருந்ததியர் காலனி பகுதியில் இறப்பு ஏற்பட்டால், வடகரை நம்மியந்தல் மாதா கோவில் வழியாக சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய சுடுகாட்டுப் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காலனி பகுதியில் பெண் ஒருவர் இறந்தார். அந்தப் பெண்ணின் சடலத்தை எடுத்துச் செல்ல அப்பகுதி சேர்ந்த சிலர் முயன்றனர். எனினும், சுடுகாட்டு பாதை தற்போது சரியில்லை என்பதால், ஊரின் வழியாக செல்லும் மெயின் ரோடு பகுதியில் இறந்த பெண்ணின் பிணத்தை எடுத்து செல்ல முடிவு செய்தனர். இதற்கு வீரளூர் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மெயின் ரோடு வழியாக இறுதி ஊர்வலம் நடந்தால் பல்வேறு பிரச்சினைகள் வரும். எனவே தற்போது செல்லும் பாதையிலேயே செல்லட்டும் என்று அவர்கள் கூறினர். அத்துடன், காலனி பகுதியில் உள்ள சிலரின் வீடுகளை அவர்கள் சூறையாடியதாக தெரிகிறது.
இந்நிலையில், 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இன்று திடீரென மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்து. இதையறிந்த திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, ஆரணி உதவி கலெக்டர் கவிதா, கலசபாக்கம் தாசில்தார் ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள், போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமையில் இருதரப்பினரிடையே சமரச கூட்டம் 9 மணி அளவில் நடந்தது. இக்கூட்டத்தில் மாதா கோவில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி, தார்சாலை அமைத்து தரப்படும். அதுவரை மெயின் ரோடு வழியாக செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu