அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டம்
ஊராட்சி மன்றத் தலைவர்கள், அலுவலகங்களில் சாவிகளை, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்தனர்
மத்திய அரசு திட்டங்களை கிராமப்புறங்களில் செயல்படுத்தும் அதிகாரங்களை ஊராட்சி மன்ற தலைவர்களிடமிருந்து பறிக்கப்படுவதாக கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தலைவர்கள் தங்களுடைய ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி சாவிகளை கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
பின்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், சாவிகளை ஒப்படைப்பது ஏன்? என விளக்கும் 6 அம்சங்களை உள்ளடக்கிய மனுவை அளித்துள்ளனர்.
கலசப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சங்கத்தினர் அளித்துள்ள மனுவில், 'கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 45 கிராம ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம், ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் அவரது கணவர் தலையீடு அதிகம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும் மானிய நிதி, கிராம ஊராட்சிக்குப் போதியளவு வழங்கவில்லை.
மத்திய அரசின் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் மற்றும் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டங்களில் பயனாளிகளைத் தேர்வு செய்வதில் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் அவரது கணவரின் தலையீடு அதிகம் உள்ளது.
ஊராட்சி செயலாளர்களைச் செயல்பட விடாமல் தடுக்கின்றனர். பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு, அதிகாரம் இல்லாத சிலர், நிர்வாகத்தில் தலையிட்டு கிராம ஊராட்சியைச் செயல்படவிடாமல் தடுக்கின்றனர். பெண் தலைவர்கள் உள்ள ஊராட்சியில், அதிகாரம் இல்லாதவர்கள் தலையிட்டு, தலைவர்களின் பணியைத் தடுத்து சீர்குலைக்கின்றனர்.
இதுபோன்ற காரணங்களால், கிராம ஊராட்சியை எங்களால் சிறப்பாகச் செயல்படுத்த முடியவில்லை. எனவே, இன்று முதல் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், ஊராட்சி நிர்வாகத்தைத் தாங்களே மேற்கொள்ளலாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், கிராம செயல் அலுவலராகப் பணியாற்றுகிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்றத் தலைவர்கள் அளித்த அலுவலக சாவிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் பெற்றுக்கொண்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu