துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 6 நியாய விலைக் கடைகள் திறப்பு

புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கிய துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் சரவணன் எம்எல்ஏ.
திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 6 இடங்களில், புதிய நியாய விலைக் கடைகள் திறந்துவைக்கப்பட்டன.
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், துரிஞ்சாபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.13.16 லட்சத்தில் புதிதாக நியாய விலைக் கடை கட்டடம் கட்டப்பட்டது.
மேலும், துரிஞ்சாபுரம் ஆதிதிராவிடா் காலனி, மதுராம்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட கணேசபுரம், மேட்டு காா்கோணம், சாலையனூா், கிளியாப்பட்டு ஆகிய 5 கிராமங்களில் புதிதாக பகுதிநேர நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட்டன.
இந்த 6 நியாய விலைக் கடைகளின் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணன் தலைமை வகித்தாா்.
மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் பாரதி ராமஜெயம், திமுக ஒன்றியச் செயலா்கள் அண்ணாமலை, ராமஜெயம், துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) பாலசுப்பிரமணியம், செயலாட்சியா் கோகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவு சாா்-பதிவாளா் தீபன் சக்கரவா்த்தி வரவேற்றாா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 6 நியாய விலைக் கடைகளையும் திறந்துவைத்துப் பேசினாா்.
அப்போது அவர் பேசுகையில், இந்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஐந்து ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தபோது, அப்பகுதி மக்கள் என்னிடம் எங்கள் பகுதியில் ரேஷன் கடை இல்லை, ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் நாங்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று தான் பொருட்களை வாங்கி வருகிறோம் ,அதுவும் சில நேரங்களில் சரியான முறையில் எங்களுக்கு கிடைப்பதில்லை , அதனால் எங்களுக்கு புதிய பகுதிநேர ரேஷன் கடை வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர் . அதன் அடிப்படையில் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஐந்து ஊராட்சிகளில் புதிய ரேஷன் கடைகளை திறந்து வைத்துள்ளோம்.
அதில் துரிஞ்சாபுரம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை மட்டும் புதிதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்துள்ளோம்.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், இடம் கார்கோணம் பகுதியில் புதிய ரேஷன் கடை வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு மற்றும் நானும் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து இந்த பகுதியில் புதிய பகுதிநேர ரேஷன் கடை பெற்று கொடுத்துள்ளோம். அதேபோல் ரேஷன் பொருட்கள் சில நேரங்களில் கிடைக்கவில்லை என்று கூறுகின்றார்கள் , அதுவும் மக்களுக்கு சரியான முறையில் ரேஷன் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மக்களுக்கு பொருட்களை தரமாகவும் சரியாகவும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம் என துணை சபாநாயகர் பேசினார்.
விழாவில், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் உஷாராணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லட்சுமி, பாபு, வட்ட வழங்கல் அலுவலா் கே.துரைராஜ், தனி வருவாய் ஆய்வாளா் பிரகாஷ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சகாதேவன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் காா்கோணம் சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu