சுடுகாட்டுக்கு செல்ல தனி பாதை என்பதை ஏற்க இயலாது: அதிகாரி காட்டம்
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண்ஹால்டர் வீரளுரில் நேரில் விசாரணை நடத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகில் உள்ள வீரளூர் ஊராட்சி அருந்ததியர் காலனி பகுதியில் கடந்த 16-ந் தேதி பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்த பெண்ணின் பிணத்தை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மெயின் ரோட்டின் வழியாக எடுத்து சென்று உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊராட்சியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் பிரச்சினை செய்தனர். மேலும் அவர்கள் காலனி பகுதியில் புகுந்து வீடுகளை சூறையாடி கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் இரு சக்கர வாகனங்கள், வீடுகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமானது. சிலருக்கு காயங்களும் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட அருந்ததியர் காலனி மக்களுக்கு ஆதரவு அளித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமை கழகத்தின் மூலம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 41 அருந்ததியின குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.20½ லட்சம் நிவாரண உதவிகள் மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்டது.
இதற்கிடையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் முருகேஷ் மற்றும் எஸ்பி பவன்குமார் ரெட்டி ஆகியோர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று தாமாக முன்வந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் அருண்ஹால்டர் தலைமையிலான குழுவினர் வீரளூர் ஊராட்சிக்கு நேரில் வந்து பார்வையிட்டனர்.
முன்னதாக அருண் ஹால்டர், ஊராட்சி நுழைவு பகுதியில் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளிடம் அங்கு நடைபெற்ற சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து அருந்ததியர் காலனி பகுதிக்கு துணைத்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பிரச்சினை நடைபெற்ற வீடுகளின் முன்பு உடைந்து கிடைந்த மோட்டார் சைக்கிள்கள், டி.வி.க்கள் போன்றவற்றை பார்வையிட்டார். சில வீடுகளின் கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருப்பதையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விவரங்களை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்று கொண்டார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் ஜ.ஜி., கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.
பின்னர் ஆணையத்தின் துணைத்தலைவர் கூறுகையில், சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்திடமும் விவரங்கள் கேட்டறியப்பட்டு உள்ளது. 21-ம் நூற்றாண்டில் பிணங்களை கொண்டு செல்ல இரு சாலை முறை என்பது ஏற்க முடியவில்லை. இதுபோன்ற நிலை இருக்கக்கூடாது. ஒரு சமூகத்தினருக்கு தனி சாலை என்பது கூடாது. இன்று வரை இது தொடர்ந்து இருக்கிறது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் இதுபோன்ற பெயரில் சாலை இருக்கக்கூடாது.
இதுபோன்ற சம்பவம் தவறானது. இதுபோன்ற செயல் இனி எங்கு நடந்தாலும் ஆணையம் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இந்த பிரச்சினை தொடர்பாக 300 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இன்னும் பாதிக்கப்பட்ட ஒரு சிலரின் பெயர் சேர்க்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அனைத்து பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
இந்த சம்பவம் தொடர்பாக 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள நபர்களை உடனடியாக கைது செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது 307 சட்டப்பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து 3 நாட்களுக்குப் பிறகு மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும். இதுபோன்ற சம்பவங்களுக்கு மூல காரணமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த அதிக அளவில் முகாம்கள் அமைத்து ஒற்றுமையை நிலை நாட்டினால் இதுபோன்ற தவறுகள் குறைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அப்பகுதியில் வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐ.ஜி. செந்தாமரைகண்ணன், டி.ஜி.பி. (விஜிலன்ஸ்) பி.கே.ரவி, ஏ.டி.ஜி.பி. தாமரைகண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, போலீஸ் சூப்பிரண்டுகள் பாலகிருஷ்ணன், ராஜேஷ்கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் 4 மாவட்டங்களை சேர்ந்த 900 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu