முதல்வரின் உத்தரவால் மலைப்பாதையில் புதிய சாலைப் பணி மீண்டும் துவக்கம்..!
சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாதுமலைபகுதியில் குட்டக்கரை கிராமத்தில் இருந்து பாதிரி, கொள்ளக்கரை, பெரியவள்ளி, பட்டான், கோவிலூர் மற்றும் மஞ்சூத் ஆகிய மலை கிராமங்களுக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாத நிலை உள்ளது. இந்த ஐந்து மலை கிராமங்களில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மலைவாழ் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் மக்கள் திருவண்ணாமலை , கலசப்பாக்கம் மற்றும் போளூர் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல உரிய சாலை வசதி இல்லை என கோரி கலசப்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், இந்த மலை கிராமங்களுக்கு சாலை வசதியை மேம்படுத்தும் வகையில் சுமார் 1 கோடியே 32.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் தார் சாலைகளும் அமைக்கப்பட்டு வரும் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் வரை எந்த எதிர்ப்பையும் வனத்துறையினர் காட்டாமல் தார் அமைத்த உடன் வனத்துறை இடம் முன் அனுமதி பெறாமல் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பி சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை ஜேசிபி எந்திரம் கொண்டு சேதப்படுத்தி உள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த 5 மலை கிராம மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஒப்பந்தக்காரர் சாலை அமைக்கும் பணிகளை தொடர்ந்து செய்யாமல் ஒப்பந்ததாரர் நிறுத்தி வைத்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இடம் கோரிக்கை
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் நடைபெற்ற அனைத்து துறை வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்திருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் அப்பகுதி மக்கள் வனத்துறையினரின் அத்துமீறல் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த பிரச்சனை தொடர்பாக 5 மாவட்ட மலைவாழ் மக்களை திரட்டி அதிமுகவின் சார்பில் ஜவ்வாது மலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர். என்ற தகவலையும் துணை முதலமைச்சரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இக்கோரிக்கையை ஏற்று துணை முதல்வர் உடனடியாக இந்த பணிகளை ஆய்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார் . மேலும் இதில் உரிய கவனம் செலுத்தும்படி பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த உத்தரவையடுத்து உடனடியாக நேற்று காலையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், மற்றும் கலசப்பாக்க சட்டமன்ற உறுப்பினர் சரவணன், வனத்துறையினர்,உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவிக்கையில்;
ஜவ்வாது மலைபகுதியில் பெரியவள்ளியிலிருந்து குட்டகரை வரை ரூ.1.32 கோடியில் 3 கிலோ மீட்டருக்கு சாலை போடும் பணி துவங்கியுள்ளது. இந்த் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதே போன்று சாலை போடும் பணி பல இடங்களில் படிப்படியாக நிறைவேற்றப்படும். தற்போது சிமெண்ட் சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ள நிலையில் வெகு விரைவாக இந்த பகுதிக்கு சாலை அமைக்கும் பணிகள் முடிவடையும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் தற்போது அனைத்து சிக்கல்களும் சரி செய்யப்பட்ட நிலையில் விரைவாக உங்களது பகுதிக்கு சாலைகள் அமைக்கப்படும் எனவும் மலை வாழ் பழங்குடியின மக்களுக்கு மாவட்ட ஆட்சிய ர் உறுதியளித்தார்.
நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன் மற்றும் மாவட்ட ஆட்சியர், வனத்துறையினர்,அரசு அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு மற்றும் நன்றியை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu