மேம்பாலம் அமைக்கும் பணி எம்எல்ஏ ஆய்வு!
மேம்பால பணிகளை ஆய்வு செய்த சரவணன் எம்எல்ஏ
கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை அடுத்த பூண்டி கிராமம் முதல் பழங்கோயில் எனப்படும் கிராமம் வரை திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சில கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. இது 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு தற்போது பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் ஆய்வு செய்தார். அவருடன் கட்சியில் முக்கிய பிரதிநிதிகளாக இருக்கும் உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.
பணி நடக்கும் இடத்தை ஆய்வு செய்துவிட்டு, பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த ஆய்வு தொடர்பாக அவர் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள இந்த பூண்டி முதல் பழங்கோயில் வரை உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கு இப்பகுதி மக்கள் பலமுறை கடந்த 10 வருடங்களாக மனு கொடுத்து வந்துள்ளனர். ஆனால் பலமுறை மேம்பாலம் அமைப்பதாக கடந்த அண்ணா திமுக ஆட்சியில் உறுதியளித்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினரும் இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது திமுக ஆட்சி வந்த உடன் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டி எங்களிடம் கோரிக்கையும் மனுவும் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சட்டமன்ற கூட்டத்தில் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கலசப்பாக்கம் பகுதியில் உள்ள பூண்டி முதல் பழங்கோயில் வரை கிராமங்களை இணைக்கும் வகையிலும் ஒரு மேம்பாலம், அதே போல் கீழ் பொத்தரை முதல் பூவாம்பட்டு வரை கிராமங்களை இணைக்கும் வகையில் ஒரு மேம்பாலம், கீழ்தாமரைப்பாக்கம் முதல் மகாதேவ மங்களம் வரை உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் ஒரு மேம்பாலம் என மொத்தம் மூன்று மேம்பாலங்களுக்கு ரூபாய் 56 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து கலசப்பாக்கம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த மேம்பாலங்கள் அமைப்பதற்கு உண்டான பணிகளையும் அரசாணைகளையும் வெளியிட்டனர்.
அதன் அடிப்படையில் சென்ற மாதம் 22 ஆம் தேதி இந்த மேம்பாலம் அமைப்பதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
அதன் அடிப்படையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மேம்பாலம் அமைப்பதற்கு உண்டான பரிசோதனைகள் அனைத்தும் செய்து , மேம்பாலம் அமைப்பதற்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த மேம்பாலம் அமைக்கப்படும். அதன் பிறகு இப்பகுதி மக்கள் இங்கு மேம்பாலத்தின் வழியாக சுலபமாக இக்கரையில் இருந்து அக்கறைக்கு செல்லலாம் .
இப்பணிகள் அனைத்தும் திமுக ஆட்சியில் தான் நடைபெறுகிறது. அதுவும் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படியும், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு வழிகாட்டுதலின்படியும், இந்த மேம்பாலம் அமைப்பதற்கு நானும் முழுமூச்சாக செயல்பட்டு தற்போது பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது என கலசபாக்கம் எம் எல் ஏ சரவணன் ஆய்வின் போது கூறினார்.
ஆய்வின்போது ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், நகர செயலாளர் சௌந்தர்ராஜன், மாவட்ட பிரதிநிதி ராஜசேகரன், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu