வீரளூரில் அரசு சார்பில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும்:அமைச்சர் வேலு

வீரளூரில் அரசு சார்பில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும்:அமைச்சர் வேலு
X

அமைச்சர் எ.வ.வேலு, வீரளூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டார்

வீரளூரில் சுடுகாட்டு பாதை பிரச்சினை தொடர்பாக அரசு சார்பில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர் வேலு கூறினார்

வீரளூரில் சுடுகாட்டு பாதை பிரச்சினை தொடர்பாக அரசு சார்பில் 10 நாட்களுக்குள் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கூறினார்.

கலசபாக்கம் அருகில் உள்ள வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பாதை பிரச்சினை தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கலவரம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புகள் முதல் டெல்லி தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத்தலைவர் வரை பாதிக்கப்பட்டவர்கள் பகுதியை நேரில் பார்வையிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அருந்ததியின மக்கள் கொடுத்த புகாரின் பேரில் இதுவரை 40-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை அமைச்சர் எ.வ.வேலு வீரளூரில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது அவர் பாதிக்கப்பட்டவர்களிடம் என்னென்ன பாதிப்பு என்பதை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசுகையில், மனம் மாற்றம் ஒன்றே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். மனமாற்றம் இல்லை என்றால் பிரச்சனை அதிகரிக்கும். இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுங்கள். தற்போது உள்ள அரசு, சாதி மதம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. கருணாநிதி, அருந்ததியின மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கினார். இதன் காரணத்தால் இன்று அருந்ததியின மக்கள் டாக்டர்களாகவும், பொறியாளர்களாகவும் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரிகளாகவும் உள்ளனர். சாதி மதத்தை பார்த்தால் யாரும் எந்த கிராமத்திலும் வாழ முடியாது.

உங்கள் பிரச்சினையை அறிந்தவுடன் முதல்-அமைச்சரிடம் பேசி அரசு அதிகாரிகளை அனுப்பி உங்களுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் கிராமத்தில் போலீசார் எத்தனை நாள் பாதுகாப்பு வழங்க முடியும். உங்கள் மனதை தேற்றிக்கொண்டு போலீசாருக்கு விடை கொடுங்கள். இனி எந்த பிரச்சினையும் நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதன் பின்னர் அங்கிருந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் மனுக்களை கொடுத்தனர். இதையடுத்து மனுவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தேவைகளையும் உடனடியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து அவர் வீரளூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கிராம பெண்களிடம் கோரிக்கையை கேட்டறிந்தார்.

அப்போது பெண்கள் கூறுகையில், கடந்த 15 நாட்களாக எங்கள் கிராமத்தில் ஒரு ஆண்கள் கூட இல்லை. இதற்கு யார் காரணம். என்ன சம்பவம் நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் ஆண்கள் தலைமறைவாகவும் எங்களை குற்றவாளிகளாகவும் போலீஸ் தரப்பில் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.

தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், இந்த தாக்குதல் சம்பவம் வருத்தத்துக்கு உரியதாகும். நாட்டில் சாலைகள் யாருக்கும் சொந்தமில்லை. அரசாங்க சாலை அனைத்து சாதியினருக்கும் சொந்தமானது. பொதுமக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஊர் மக்களின் நலன் கருதி அரசு சார்பில் 10 நாட்களுக்குள் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசி முடிவு செய்து இரு தரப்பிலும் சமாதானமாக செல்ல வேண்டும் என்றார்.

அப்போது கூடுதல் கலெக்டர் பிரதாப், எம்பி அண்ணாதுரை. கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், வட்டாட்சியர் உதயகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!