தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் ஆய்வு
ஜவ்வாதுமலை அரசு பள்ளிகளில் ஆய்வு செய்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பிரீத்தி பரட்வாட்ச் தலால்
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், ஜவ்வாதுமலை அரசு பள்ளிகளில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பிரீத்தி பரட்வாட்ச் தலால் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் அவர் கற்கும் திறன் குறித்து மாணவிகளுடன் உரையாடினார்.
ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் குழந்தைகளுக்கான குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பிரீத்தி பரட்வாட்ச் தலால் தலைமை தாங்கினார்.
அப்போது அவரிடம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படும் அனைத்து அங்கன்வாடிகள், பள்ளிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறித்த அனைத்து அடிப்படை விவரங்களும் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
மேலும் கூட்டத்தின் போது குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, பிறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், மருத்துவ உதவி, பஸ் வசதி ஆகிய உதவிகளை கோரி 311 மனுக்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் அறிவுறுத்தினார்.
மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் காது மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவிகள் அளிக்கப்பட்டது.
மேலும் பிறப்பு, இறப்பு, இருப்பிடம், சாதி உள்ளிட்ட வருவாய் துறை சான்றுகள், ஆதார் அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் மற்றும் சான்றுகள், இடைநின்ற மாணவர்களை மீள பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் சேர்த்தல், மருத்துவ உதவிகள், முதலமைச்சர் காப்பீட்டு அட்டை, புதிய வங்கி கணக்கு தொடங்குதல் ஆகியவற்றிற்காக அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களையும், பழங்குடியினர் நலத்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து அலகு மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகளால் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பெருங்காட்டூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்ட தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அணையை உறுப்பினர் பிரீத்தி பரட்வாட்ச் தலால், அங்குள்ள மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் கற்கும் திறன் மற்றும் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி, போளூர் டிஎஸ்பி கோவிந்தசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, மாவட்ட குழந்தைகள் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலர் கந்தன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வி, ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் ஜீவா மூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu