கலசப்பாக்கத்தில் மகளிர் கலைக்கல்லூரி தொடங்க இடம் அளவிடும் பணி துவக்கம்
கல்லூரி அமைய உள்ள இடத்தில் அதிகாரிகள் அளவீடு பணியை தொடங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் எ.வ.வேலு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், கலசபாக்கம் பகுதியில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
மேலும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பெ.சு.தி.சரவணன் கலசபாக்கம் பகுதியில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்து சமய அறநிலைத்துறை மூலம் கலசபாக்கம் பகுதியில், மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கலசபாக்கம் அடுத்த பருவத மலை அடிவாரத்தில் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் கல்லூரிக்காக நிலம் அளவீடு பணிகள் தொடங்கியது. இதில் சுமார் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் கல்லூரி அமைய உள்ளது. இதையடுத்து இணை ஆணையர் கஜேந்திரன், உதவி கோட்ட செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் சீனிவாசலு, செயல் அலுவலர் ஹரிஹரன் ஆகியோர் நில அளவீடு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஒரு சில தினங்களில் கல்லூரி அமைய உள்ள இடத்தில் அதிகாரிகள் மண் பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu