கலசப்பாக்கம் அருகே சுற்றுலா சென்றவரின் வீட்டில் நகை, பணம் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தேவன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் தேவன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி கொண்டு 10 நாட்கள் சுற்றுலா சென்றார்.
சுற்றுலா முடிந்து இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் உள்ள பொருட்கள் களைந்து இருந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 65 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து தேவன் கலசபாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர்.
பின்னர் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
அம்மன் நகை திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பைபாஸ் சாலை அருகே முத்துராமலிங்க தேவர் நகர் பகுதியில் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் தினமும் கோவில் இரவு நடை சாத்தப்படும். அதன்படி நேற்று இரவு வழக்கம் போல் கோவில் நடை சாத்தப்பட்டது.
பின்னர் மீண்டும் இன்று காலை கோவில் நிர்வாகி வந்து பார்த்த போது கோவில் பூட்டை உடைத்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது உண்டியலில் இருந்த 7ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் அம்மன் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்க தாலி ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து கோவில் நிர்வாகி அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் பூட்டு உடைத்து திருடி சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu