ஜவ்வாது மலை கோடை விழா வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிப்பு

ஜவ்வாது மலை கோடை விழாவில் பரிசுகளை வழங்கிய துணை சபாநாயகர் மற்றும் அதிகாரிகள்
ஜவ்வாதுமலை கோடைவிழா மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்
ஜவ்வாது மலையில் கோடைவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையொட்டி மலர் கண்காட்சி, காய்கறிகளால் சிறப்பு அலங்காரங்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. விளையாட்டு போட்டிகளும் மலைவாழ் மக்களுக்கு நடத்தப்பட்டன.
2-ஆம் நாளான நேற்று காலை 9 மணி முதல் மாலை வரை பல்சுவை பரத நிகழ்ச்சி, பாஞ்சாலி சபதம் கூத்து நிகழ்ச்சி, சமத்துவ நாடகம், பரதம், நாய்கள் கண்காட்சி, நாடகம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், காவல்துறை மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி, மலா்க் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, இயற்கையில் விளைந்த காய்கறிகளின் விற்பனைச் சந்தை, மலைவாழ் மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், கால்நடை சிறப்பு மருத்துவ முகாம், பாரம்பரிய உணவுத் திருவிழா, பெண்களுக்கான கோலப் போட்டிகள், மலைவாழ் மக்களின் பாரம்பரியப் பாடல்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
கோடை விழாவின் நிறைவு விழா கோடை விழாவின் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது.
அதன்படி நேற்று நடந்த விழாவுக்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். எஸ்பி கார்த்திகேயன் , எம்.எல்.ஏ.க்கள் சரவணன், கிரி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னிலை வகித்தனர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் தனலட்சுமி வரவேற்றார்.
இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அரங்குகள் அமைத்த பல்வேறு அரசு துறைகளுக்கும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
அவர் பேசும்போது கடந்த 23 ஆண்டுகளாக ஜவ்வாதுமலையில் கோடைவிழா நடந்து வந்தாலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையால் கோடைவிழா இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கு மிக சிறப்பாக நடந்தது.
திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் தான் ஜவ்வாதுமலையில் அடிப்படை வசதிகள் முதல் முறையாக நிறைவேற்றப்பட்டன. போளூருக்கும் ஜமுனாமரத்துருக்கும் போக்குவரத்து வசதியை மேம்படுத்த மலையடிவாரத்தில் எனது முயற்சியால் தான் மேம்பாலம் கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் மேல்நிலை தொட்டி, துணை மின்நிலையம் மினிபஸ் வசதி என படிப்படியாக பல வசதிகள் கொண்டு வரப்பட்டன. இதையெல்லாம் மலைவாழ் மக்கள் மறந்து விடக்கூடாது. திமுக ஆட்சி எப்போதும் மலைவாழ் மக்கள் முன்னேற்றத்திற்காக உறுதுணையாக இருக்கும் என்றார்.
அதனை தொடர்ந்து கலெக்டர் முருகேஷ் பேசியதாவது: இந்த கோடைவிழா மலைவாழ் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விழாவாக மட்டும் இல்லாமல் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படும் போது அதனை சார்ந்து மற்ற திட்டங்களும் மக்களுக்கு தானாகவே கிடைக்கிறது.
இதே போல் நரிக்குறவர்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் நடந்தது. இதில் நம் மாவட்டத்தில் 1550 பேருக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாநில அளவில் நம் மாவட்டம் தான் முதலிடம் பிடித்துள்ளது. பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க கோடைவிழா வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலா் பாலமுருகன் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா் முடிவில் சுற்றுலாத்துறை அலுவலர் அஸ்வினி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu