செய்யாற்று மணலில் புதையுண்டதா பழமையான கோவில்? - பள்ளம் தோண்டும் பணி தீவிரம்

கோவில் புதைந்திருக்கப்பதாக கூறப்படும் இடத்தை, பள்ளம் எடுக்கும் பணி தொடங்கியது.
கலசபாக்கம், செய்யாற்றில் தீர்த்தவாரி நடத்துவதற்காக பள்ளம் தோண்டியபோது கோவில் புதைந்திருப்பதாக கூறப்பட்ட இடத்தில் 100 நாள் பணியாளர்கள் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் முன்னிலையில் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலூகா எலத்தூர் கிராமத்தில் கரைகண்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சார்பில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மாசி மகத்தன்று தீர்த்தவாரி திருவிழா நடத்தப்பட்டு வந்தது. பின்னர் ஏதோ சில காரணத்தால், தீர்த்தவாரி நடத்துவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த அப்துல் கலாம் பாய்ஸ் குரூப்பை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, கரைகண்டீஸ்வரரை ஆற்றுக்கு எடுத்து சென்று தீர்த்தவாரி நடத்துவதற்காக, மந்தவெளி பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்றில் பள்ளம் தோண்டினர்.
அப்போது பள்ளம் தோண்ட முடியாத அளவுக்கு பெரிய, பெரிய கற்தூண்கள் காணப்பட்டது. இதனால் பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தினர்.
உடனடியாக வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் எம்.எல்.ஏ.க்கள் போளூர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கலசபாக்கம் சரவணன், தாசில்தார் ராஜராஜேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், இந்த கற்கள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டிருந்தால் ஆங்காங்கே சிதறி கிடந்திருக்கும். கோவில் கோபுரத்தின் மேல் மூடப்பட்டிருக்கும் தூண்களாகவே உள்ளது. மேலும் அந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட செங்கற்கள் உள்ளது. எனவே கண்டிப்பாக இங்கு கோவில் இருந்து, நாளடைவில் புதைந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் கூறும்போது, 100 நாள் வேலை பணியாளர்களை கொண்டு முதலில் மணலை அப்புறப்படுத்தி உள்ளே இருக்கும் கற்களை சேதப்படுத்தாமல் அதுபற்றி தெரிந்து கொண்ட பிறகு பொக்லைன் எந்திரம் வைத்து மற்ற பணிகளை தொடங்கலாம் என்று அதிகாரிகளிடம், எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து எலத்தூர் ஊராட்சியை சேர்ந்த 100 நாள் பணியாளர்களை கொண்டு ஆற்றில் கோவில் புதைந்துள்ளதாக கூறப்படும் இடத்தில் பள்ளம் தோண்டும் பணி தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu