விஜய நகர கால கல்வெட்டுகள் நடுகற்கள் கண்டுபிடிப்பு!

விஜய நகர கால கல்வெட்டுகள் நடுகற்கள் கண்டுபிடிப்பு!
X

கண்டெடுக்கப்பட்ட விஜயநகர கால கல்வெட்டுக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் விஜய நகர கால கல்வெட்டுகள் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம், தேவராயன்பாளையம், சீனந்தல் ஆகிய கிராமங்களில் விஜயநகர காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள், நடுகற்கள் கண்டறிப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினைச் சேர்ந்த கேட்டவரம்பாளையம் ஜெ.சிவா அளித்த தகவலின் அடிப்படையில் வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் பாலமுருகன், பழனிசாமி, விநாயகம், ராஜா ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர்.

அதில், தென்மாதிமங்கலம் கிராமத்தில் பர்வதமலை கிரிவலப்பாதையில் உள்ள பலகைக்கல்லில் விஜயநகர காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டில் சூரியன், சந்திரன், திருவண்ணாமலை மலையின் படம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் நிலதானம் மற்றும் வரிகள் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கார்த்திகை, சித்திரை நவரை காலங்களில் செய்யும் பயிருக்கு ஏற்றவாறு வரி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக் கல்வெட்டில் நல்லெருது, காணிக்கை உள்ளிட்ட பல்வேறு வரிவிதித்தது குறித்தும் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவராயன் பாளையம் அருகே உள்ள பெருமாள் பாளையத்தில் உள்ள பலகைக் கல்வெட்டில் சக ஆண்டு 1587 இல் தேவராயன் பாளையத்தில் நிலதானம் செய்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டிலும் திருவண்ணாமலை மலையைக் குறிக்க முக்காணம் போன்ற குறியீடு வெட்டப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மலையைக் குறிக்கும் கல்வெட்டுகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ள குறிப்பிடத்தக்கதாகும்.

திருவண்ணாமலை வரலாற்றுக் காலத்தில் சக்திவாய்ந்த மையமாக இருந்ததை இந்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. தேவராயன்பாளையம் அடுத்த பெருமாள் பாளையத்தில் பூமியில் புதையுண்டிருந்த நடுகல்லும், சீனந்தல் மற்றும் வேளாநந்தல் கிராமத்தில் அழிவின் நிலையில் இருந்த நடுகல்லும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்டு எடுக்கப்பட்டு அவை அதே இடத்தில் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டன.

இதுவரை 6 நடுகற்களையும் 2 கல்வெட்டுகளையும் இப்பகுதியில் அழிவின் விளிம்பில் இருந்து சிவா முயற்சியால் மீட்கப்பட்டுள்ளது.

இப்பணியில் சத்தியமூர்த்தி, விஜய், ஸ்ரீதர், விவசாயி சுப்ரமணி, சிவகுமார், லெனின், பழனிமுருகன், குமரேசன், ராம்குமார், கோபிராஜ் ஆகியோர்களும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கலசபாக்கம் பகுதியில் நடுகற்கள், கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் ஆவணப்படுத்தும் பணி திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக தொல்லியல் துறை ஊர் தோறும் உள்ள வரலாற்றுச் சின்னங்களை மீட்டெடுக்கவும் ஆவணப்படுத்தவும் வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!