அறுவடை செய்த கரும்புகள் வயலிலேயே காயும் நிலை: விவசாயிகள் வேதனை

அறுவடை செய்த கரும்புகள் வயலிலேயே காயும் நிலை: விவசாயிகள் வேதனை
X

அறுவடை செய்த கரும்புகள் 4 நாட்களாக வயலிலேயே காயும் நிலை.

கலசபாக்கம் அருகே ஆலை நிர்வாகம் லாரியை அனுப்பாததால் அறுவடை செய்த கரும்புகள் 4 நாட்களாக வயலிலேயே காயும் நிலை ஏற்பட்டுள்ளது.

கலசப்பாக்கம் அடுத்த சி.நம்மியந்தல் கிராம பகுதி விவசாயிகளில் பலர் கரும்பு பயிரிட்டு திருப்பத்தூர் அரசு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நன்கு விளைச்சலடைந்த கரும்புகளை சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் அனுமதியின்பேரில் அறுவடை செய்யப்பட்டது. ஆனால் 4 நாட்களாகியும் லாரி வராததால் அறுவடை செய்த கரும்புகள் வயலிலேயே காய்ந்து வருகின்றன.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கர் கரும்பு நடவு செய்வதற்கு ரூ.25 ஆயிரம் செலவாகிறது. இதன்பின்னர் 12 மாதங்கள் கண் விழித்து காப்பாற்றி வெட்டும்போது ஒரு டன் கூலியாக ரூ.900மும், தோட்டத்தில் இருந்து லாரியில் ஏற்றுவதற்கு கூலியாக ரூ.400ம் செலவாகிறது. இவ்வளவு செலவு செய்தும் ஏக்கருக்கு 60 டன் வர வேண்டிய நிலையில் 30 டன் மட்டுமே கரும்பு மகசூல் கிடைக்கிறது. அதிலாவது ஏதாவது கிடைக்கும் என நாங்கள் பயிரிட்ட கரும்பை ஆலைக்கு அனுப்பி வைக்கலாம் என்று இருந்தால் அறுவடை செய்தபின் ஆலை நிர்வாகம் லாரியை அனுப்பவில்லை.

ஆலையில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் சரி செய்தபின்னரே கரும்புகளை எடுத்து செல்ல முடியும் என கூறுகின்றனர். வெட்டிய கூலி கூட கிடைக்காது இதனால் அறுவடை செய்த கரும்புகள் அனைத்தும் தக்கைபோல் காய்கிறது. இதனை ஏற்றி அனுப்பினால் வெட்டிய கூலி கூட நிற்காது.

மேலும் ஆலை ரிப்பேர் என்றால் கரும்பு வெட்டுவதை களப்பணியாளர் நிறுத்த சொல்ல வேண்டும். எனவே ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு எடைக்குறைவால் ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணம் தர வேண்டும்.

தமிழக அரசின் சார்பில் விவசாயத்திற்காக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தாலும் எங்களுக்கு எதுவும் கிடைக்காமல் கண்ணீர் மட்டுமே மிச்சமாகிறது. இந்த பிரச்சனையை நாங்கள் எங்கேபோய் சொல்வது? ஒரு விவசாயியின் கரும்பு 4 நாட்களாக தோட்டத்திலும், ரோடு ஓரத்திலும் கேட்பாரற்று கிடந்தால் இதற்கு காவல் காப்பது யார்? இங்கு எனது கரும்பு மட்டுமல்லாமல் சுற்றிலும் உள்ள பல ஏக்கர் விவசாயிகளின் கரும்பின் நிலையும் இதே நிலைதான் உள்ளது.

இதனால் கரும்பு பயிர் செய்வதை விட்டுவிடலாம் என்ற மனவேதனையுடன் கூறினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil