காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றி வாழ மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை

காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றி வாழ மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை
X

ஜவ்வாது மலையில் பழங்குடியின மாணவர்களுடன் ஆளுநர் ரவி

காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து அனைவரும் வாழ்வில் முன்னேற வேண்டும் என பழங்குடியின சமூக மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் ஆளுநர் பேசினார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் திருவண்ணாமலை வந்தார். நேற்று அவர் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஜவ்வாதுமலைக்கு சென்றார்.

சுதந்திரம் பெற்ற 25 ஆண்டுகளில் இதுவரையில் ஜவ்வாது மலைக்கு எந்த ஒரு ஆளுநரும் சென்றதில்லை. தற்போது முதல் முறையாக தமிழக ஆளுநர் அங்கு சென்று தனியார் தொண்டு நிறுவனம் நடத்தும் பள்ளியில் மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் அனைவரும் ஆளுநருக்கு பூக்கள் தூவி வரவேற்றனர்.

அப்பொழுது திடீரென மழை கொட்டியது. கொட்டும் மழையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

இந்த ஜவ்வாதுமலையில் முதல் முதலாக வந்த நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நான் இங்கே வந்தபோது இந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி இந்த ஜவ்வாது மலையில் சந்தன மரங்கள் நிறைந்திருக்கும். அதனால் சந்தன வாசனை எப்போதும் இருக்கும். ஆனால் இப்போது மரங்கள் அனைத்தும் அழிந்து விட்டன. அதனால் இன்று வாசனை வருவதில்லை என்று கூறினார்.

ஆனால் மாணவ செல்வங்களே உங்களையும் உங்கள் பெற்றோர்களையும் பார்த்தபோது அந்த சந்தன வாசனை வீசுகின்றது. நான் படிக்கும் காலத்தில் ஒரு வசதி கூட இல்லை. என் தந்தை ஒரு சாதாரண விவசாயி. ஆனால் நான் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று கனவு கண்டேன். அதன்படி விடாமுயற்சியால் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன்.

அதுபோல் நீங்களும் வரவேண்டும் என்று நான் விரும்புகின்றேன். நீங்கள் அனைவரும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறும் நெறிமுறைகள் வழிமுறைகளை பின்பற்றி வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்.

இந்த தொண்டு நிறுவனம் காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வருகிறது. அதுபோல் நீங்களும் காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து வாழ்வில் முன்னேற வேண்டும். இந்தப் பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி முன்னாள் மாணவர் மன்றங்களை உருவாக்கி அவ்வப்போது பள்ளிக்கு வந்து புதிய மாணவர்களுக்கு ஆலோசனை கூற வேண்டும்.

இந்த ஜவ்வாதுமலை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னிடம் தொலைபேசியிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

இன்று நம் நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் நாம் அனைவரும் காந்தியின் வழியை பின்பற்றுவதே ஆகும். காந்தியின் வழியை பின்பற்றுவதால் தான் நாம் இன்று பாதுகாப்பாக இருக்கின்றோம். வரும் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை சுதந்திர தினத்தன்று நாம் வீடுகளில் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்துவோம். என ஆளுநர் பேசினார்.

முன்னதாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, யோகா போன்றவற்றை ஆளுநர் கண்டுகளித்து பாராட்டினார். பின்னர் மாணவர்களுக்கு தேசிய கொடிகள், புத்தகங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!