ஜவ்வாது மலையில் வரலாறு காணாத காட்டாற்று வெள்ளம்
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் அதிகளவு கன மழை பெய்து வருவதால், மலையடிவாரத்தில் உள்ள குப்பநத்தம் அணை, செண்பகதோப்பு அணை மற்றும் மிருகண்டா நதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அணைப் பகுதியிலும் மிதமான மழை பெய்துள்ளதால், அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக உயர்ந்துவருகிறது.
இதன் காரணமாக செய்யாறு மற்றும் கமண்டல நாக நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அணைகளை ஒட்டியுள்ள கிராமங்கள் மற்றும் ஆற்றங்கரையோர கிராமங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தற்போது வரையில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கனமழையால் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் போளூரில் இருந்து ஜவ்வாது மலை செல்லும் சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் விழுந்துள்ளன. இதேபோல், ஜவ்வாது மலையில் உள்ள பல வழித்தடங்களிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை ஒட்டியுள்ள குப்பநாத்தம் அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து வெளியேற்றப்பட்ட வந்த நிலையில் திடீரென பெய்த கன மழையால் மலையில் இருந்து பெரிய காட்டாறு வெள்ளம் ஏற்பட்டது அது புதிய வழி தடத்தை உருவாக்கிக்கொண்டு வழியெங்கும் உள்ள மரங்களையும் தார்சாலையையும் சேதப்படுத்தி செய்யாறு ஆற்றில் கலந்தது.
59.04 அடி உயரம் உள்ள குப்பநத்தம் அணையின் நீர்மட்டம் 57.07 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி வந்த 1,000 கனஅடி தண்ணீர் செய்யாற்றில் வெளியேற்றப்பட்டது. தற்போது வரையில் அணைக்கு வந்த 2 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் செய்யாற்றில் 38 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் முத்தனூர் உள்ள தரைப்பாலம் மூழ்கி உள்ளது. குப்பநத்தம் - கல்லாத்தூர் இடையே மண் சரிவு காரணமாக 10 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu