மானிய விலையில் உரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

மானிய விலையில் உரம் வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
X
கலசபாக்கம் தாலுகாவில் சம்பா நடவு செய்ய மானிய விலையில் உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

கலசபாக்கம் பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். இப்பகுதி மக்களின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. இங்கு நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிர் வகைகள், சம்பங்கி, மல்லி, முல்லை, கோழிக்கொண்டை உள்ளிட்ட மலர் வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக கலசபாக்கம் தாலுகாவில் உள்ள ஏரிகள், குளங்கள் முழுமையாக நிரம்பிதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும், தொடர் மழை காரணமாக அறுவடை தருவாயில் இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.மேலும், கால்நடைகளுக்கு பயன்படும் வைக்கோலும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியது.

தற்போது விவசாய நிலத்தை காலி செய்வதற்காக அறுவடை இயந்திரங்கள் மூலம் விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏக்கருக்கு 30 மூட்டை மகசூல் கொடுக்க வேண்டிய விவசாய நிலங்களில் தற்போது ஏக்கருக்கு 7 மூட்டை நெல் மட்டுமே மகசூல் கிடைத்துள்ளதால், விவசாயிகள் இடுபொருட்களுக்கு செய்த செலவினைகூட முழுமையாக எடுக்க முடியவில்லை.

நெற்பயிர் சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அனுப்பிய அறிக்கை விவசாயிகளுக்கு திருப்திகரமாக அமையவில்லை. தஞ்சை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல் உற்பத்தி இருந்து வந்தது. சமீபத்தில் வந்த மத்திய குழு திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்யாததால் விவசாயிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.

இருப்பினும் ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் தொடர்ந்து சம்பா நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கலசபாக்கம் பகுதியில் சீரக சம்பா, பொன்னி, இளப்பம் பூ, சம்பா உள்ளிட்ட உயர்ரக நெல் பயிர்களை இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்திலேயே கலசபாக்கம் தாலுகாவில்தான் தொடர் மழை காரணமாக பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

எனவே, சம்பா நடவு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு வங்கிகளில் வங்கிக்கடன் வழங்கிடவும், மானிய விலையில் உரங்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!