சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை டோலி கட்டி தூக்கிய கொடுமை

சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை டோலி கட்டி தூக்கிய கொடுமை
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு அருகே சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை டோலி கட்டி தூக்கிச் சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் படவேடு மலை அடிவாரத்தில் இருந்து எலந்தம்பட்டு கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் இறந்த பெண்ணின் உடலை அவரது உறவினர்கள் டோலி கட்டி தூக்கி சென்றனர். இதனால் சாலை வசதி கேட்டு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், படைவீடு அருகே ஜவ்வாதுமலை - எலந்தம்பட்டு கிராமம் உள்ளது. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். யாருக்கும் உடல்நிலை சரியில்லை என்றால் கூட ஆஸ்பத்திரிக்கு செல்ல முறையான சாலை வசதி கிடையாது. இதனால் பலமுறை பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி சாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலகுறைவால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

அதைத் தொடர்ந்து அவரது உடல் அரசு ஆம்புலன்ஸ் மூலம் எலந்தம்பட்டு கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள படவேடு மலை அடிவாரம் வரை கொண்டு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து எலந்தம்பட்டு கிராமத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் சாந்தியின் உடலை மலை அடிவாரத்திலேயே இறக்கிவிட்டு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்றுவிட்டனர். இதையடுத்து அவரது உறவினர்கள் சாந்தியின் உடலை மலை அடிவாரத்தில் நேற்று மாலை வரை வைத்திருந்தனர்.

இதனையடுத்து, என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் சோகத்துடனே இருந்தனர். வேறு வழி இல்லாத நிலையில், சாந்தியின் உடலை கொம்பு ஒன்றில் துணிகளால் கட்டி மலை அடிவாரத்தில் வைத்தனர். அங்கிருந்து காட்டு வழியில் உடலை தூக்கிச் செல்ல திட்டமிட்டுள்ளனர். சாலை வசதி இல்லாத காரணத்தினால் இறந்தவர் உடலை துணியில் கட்டு எடுத்து சென்றது பார்ப்போர் நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்தது.

படவேடு மலை அடிவாரப் பகுதியில் இருந்து எலந்தப்பட்டு கிராமத்திற்கு சுமார் 6 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது.

எலந்தப்பட்டு பகுதியில் இருந்து போதிய சாலை வசதி இல்லாத காரணத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடலை டோலி அமைத்து கொண்டு வந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு எலந்தம்பட்டு கிராமத்திற்கு மட்டுமின்றி சாலை வசதியில்லாத மலை கிராமங்களுக்கு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!