திமுக எந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது; திணிப்பை தான் எதிர்க்கிறோம் - உதயநிதி
திராவிட பயிற்சி பாசறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
அதிமுக வா திமுக வா என்று இருந்த காலம் போய் ஆரியமா? திராவிடமா? என இப்பொழுது மேடைகளில் பேசப்படுகிறது என திருவண்ணாமலை நடைபெற்ற திராவிட பயிற்சி பாசறையில் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
திருவண்ணாமலை அடுத்த தென் பள்ளிப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற திராவிட பயிற்சி பாசறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கினார். வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பொன் தனுசு, அருள்குமரன், விஜய்ராஜ், கலைமணி, ரஞ்சித், தினேஷ்குமார், ராம்மோகன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என்.நரேஷ்குமார் வரவேற்றார். பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தொடக்கவுரை ஆற்றினார்.
திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் வழக்கறிஞர் அருள்மொழி, மாநில சுயாட்சி என்ற தலைப்பில் ஊடகவியலாளர் லெனின் ஆகியோர் பேசினார்கள். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:
திருவண்ணாமலைக்கு நான் சட்டமன்ற உறுப்பினரான பிறகு முதல்முறையாக தற்போது வந்துள்ளேன். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க இளைஞர் அணி தான் முக்கிய காரணம். அதற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளையும் இணைத்து நடத்தப்படும் இந்த இளைஞர் அணி பாசறை கூட்டம் மாநாடு போல் காட்சியளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் இந்த இளைஞர் பாசறை கூட்டத்தை தொடங்கினோம் அதனைத்தொடர்ந்து 5 மாதங்களில் 210 தொகுதிகளில் பயிற்சி பாசறை கூட்டம் நடத்தியுள்ளோம்.
இந்த கூட்டமானது தி.மு.க.வின் வரலாற்றை இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் நடத்தப்படுகிறது. கூட்டம் சேர்ப்பது பெரிதல்ல. கொள்கையை கொண்டு போய் சேர்ப்பது தான் முக்கியம். அதனால் மீண்டும் தொகுதி வாரியாக மற்றும் ஒன்றியங்கள் வாரியாக இந்த இளைஞர் பாசறை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். அண்ணன் அமைச்சர் எ.வ.வேலு, கலைஞரிடம் பயிற்சி பெற்றவர். எதிலும் வல்லவர் என்பதை செயல்படுத்தி காட்டக்கூடிய திறமை மிக்கவர்.
ஒரு தொகுதிக்கு ஒரு நிகழ்ச்சி என்று 35 கருத்துரையாளர்கள் நம்முடைய இயக்க வரலாற்றையும் கழகத்தினுடைய சாதனைகளையும் தலைவருடைய பெருமையும் கொண்டு போய் சேர்ப்பதற்கு இந்த பேச்சாளர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.
இப்பொழுது ஏன் திராவிட மாடல் பயிற்சி பாசறை அவசியம் அதை ஏன் கையில் எடுத்துக் கொண்டுள்ளீர்கள் என்று பலர் கேட்கிறார்கள்.
தி.மு.க. எந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது. இந்தி திணிப்பை தான் நாங்கள் எதிர்க்கிறோம். உயர்கல்வியில் இந்தியை ஒரு பாடமாக கொண்டு வர வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார். இதை எதிர்த்து முதல் முதலாக குரல் கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அதனைத்தொடர்ந்து மற்ற மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் மத்திய பாஜக அரசு எப்படியாவது தமிழ்நாட்டுக்குள் இந்தியை திணிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் . திமுக இருக்கும் வரை நம்முடைய தலைவர் இருக்கும் வரை நம்முடைய தமிழ்நாட்டில் அது நடக்கவே நடக்காது, ஏனென்றால் இந்தி எதிர்ப்பில் உருவான இயக்கம் திராவிட இயக்கம்.
மத்தியில் ஆளுகின்ற பாரதீய ஜனதா கட்சி இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வர முடியவில்லை. இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய உரிமை மற்றும் பல்வேறு திட்டங்களை அனைத்தும் பறிக்கப்படுகின்றன.
வருகின்ற 2023 பாராளுமன்றத் தேர்தலில் நாம் முழு வெற்றி பெற வேண்டும். நம் தலைவர் அமைப்பது தான் வெற்றி கூட்டணி . நம் தலைவர் சொல்பவர் தான் பிரதமர் ஆவார், இதற்கு நீங்கள் அத்தனை பேரும் உறுதுணையாக இருந்து தலைவர் அவர்களுக்கும் கழகத்திற்கும் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu