மனித உரிமை ஆணையத்தில் புகார்: வீரளூர் கிராமத்தில் கலெக்டர் நேரில் விசாரணை
கலெக்டர் முருகேஷ்.
மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகாரின் பேரில் வீரளூர் கிராமத்தில் கலெக்டர் முருகேஷ் நேரில் விசாரணை நடத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட வீரளூர் கிராமத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அருந்ததியர் காலனியில் வசிக்கும் மக்களுக்கும், ஊர் மக்களுக்கும் இடையே சுடுகாட்டு பாதை சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு, கலவரமாக மாறியது.
அப்போது மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி சிவகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
தொடர்ந்து கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த அருந்ததியர் மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அமைச்சர் எ.வ.வேலு, சரவணன் எம்.எல்.ஏ., அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி உரிய நிவாரணம் வழங்குவதாக கூறினர்.
அதன் பிறகு ரூ.62 லட்சம் நிவாரண உதவித்தொகை அரசு சார்பில் வழங்கப்பட்டது. தொடர்ந்து அருந்ததியர் மக்கள் நிவாரண தொகை போதுமானதாக இல்லை மற்றும் முறையாக அனைவருக்கும் வழங்கப்படவில்லை என மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தனர்.
இதுதொடர்பாக நேற்று கலெக்டர் முருகேஷ் வீரளூர் கிராமத்திற்கு நேரில் சென்று அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் அருந்ததி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவரிடம் தனித்தனியாக விசாரணை செய்து, உண்மையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். அப்போது அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu