திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை உணவு திட்ட முன்னேற்பாட்டை கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை உணவு திட்ட முன்னேற்பாட்டை கலெக்டர் ஆய்வு
X

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நடத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலை உணவு திட்டம் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் நேரடி ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக முழுவதும் முதற்கட்டமாக வரும் 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 17 பள்ளிகள் மற்றும் செய்யாறு நகராட்சியில் உள்ள 7 பள்ளிகள் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள 46 பள்ளிகள் உட்பட 70 பள்ளிகளில் திட்டம் வரும் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

அதன் மூலம் திருவண்ணாமலை நகராட்சியில் 1,652 மாணவர்கள் செய்யாறு நகராட்சியில் 607 மாணவர்கள், ஜவ்வாது மலைப்பகுதியில் 1981 மாணவர்கள் உட்பட மொத்தம் 4240 மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன்பெற உள்ளனர்.

இத்திட்டத்திற்காக திருவண்ணாமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சமைக்கப்படும் காலை உணவு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கொண்டு சென்று வழங்கப்படும் . அதேபோல் செய்யாறு நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செய்யாறு பகுதியில் சமையல் செய்து பள்ளிகளுக்கு வழங்கப்படும்.

ஆனால் ஜவ்வாது மலைப்பகுதியில் ஒவ்வொரு பள்ளியும் வெவ்வேறு இடங்களில் தொலைதூரத்தில் அமைந்துள்ளது. எனவே ஒரே இடத்தில் சமைத்து வழங்க இயலாது. அந்தந்த பள்ளிகளில் காலை உணவு சமைத்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி ஜவ்வாது மலை பகுதியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரடி ஆய்வு நடத்தினார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் . மேலும் மகளிர் சுய உதவி குழுவினரை அழைத்து இத்திட்டம் குறித்து விளக்கினார் . அப்போது ஜவ்வாது மலை பகுதியில் காலை உணவு வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள 46 பள்ளிகளிலும் சமையல் கூடங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்து அவற்றை சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் ஒவ்வொரு பள்ளிக்கும் சமையல் பணிக்கு பொறுப்பாக நியமிக்கப்படும் மகளிர் குழுவினர் தங்களுடைய குழந்தைக்கு சமைப்பதை போல் சுவையாகவும் சுகாதாரமாகவும் சமைக்க வேண்டும் , அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளி மேலாண்மை குழுவினர் இத்திட்டம் சிறப்பாக அமைய ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.

இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சையத் சுலைமான், செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன் , ஜவ்வாது மலை ஒன்றிய குழு தலைவர் ஜீவாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் , அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்

Tags

Next Story
ai tools for education