சில்லுனு காத்து.. ஜம்முனு கிளைமேட்.. கோடை மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம்
திருவண்ணாமலை பெய்த மழை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 92.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவானது.
அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை வெயில் பாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் கடந்த நான்காம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் வழக்கத்தை விட அதிகமான அளவில் வெயில் வாட்டி வதைக்கும் என மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் திடீரென்று கோடை மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தப்பித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையும் மிதமான மழையும் பெய்தது. இதில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 92.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
செய்யாறு -64, வந்தவாசி -46, போளூர் -33.2, ஜமுனாமரத்தூர் -20, சேத்துப்பட்டு -17, செங்கம் -7.4, வெம்பாக்கம் -7, ஆரணி -4.8. மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.
செங்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செங்கம், பரமனந்தல், குப்பநத்தம், புதுப்பாளையம், மேல்பள்ளிப்பட்டு, இறையூர், கொட்டகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
செய்யாறு தாலுக்கா தூசி கிராமத்தில் நேற்று மாலை 3 மணி அளவில் திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது காந்திநகர் தெருவில் தென்னை மரத்தின் மீது இடி விழுந்தது
மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மேல்சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்டா அணையின் முழு கொள்ளளவு 23 அடியாகும்.
இந்த நிலையில் ஜவ்வாதுமலை மற்றும் கலசபாக்கம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் ஜவ்வாதுமலை பகுதியில் இருந்து மிருகண்டா நதி அணைக்கு சுமார் 100 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு உள்ளன. இதனால் அணையின் நீர்மட்டம் 20 அடி கொள்ளளவுக்கு மேல் நிரம்பி வருகின்றன.
தற்போது அணையின் பாதுகாப்பு கருதி சுமார் 100 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அணையின் அருகே உள்ள சீனாந்தல், காந்தபாளையம், ஆதமங்கலம் புதூர், கெங்கலமகாதேவி, கேட்டவரம்பாளையம், அருணகிரிமங்கலம், சிருவள்ளூர், எலத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu