தனக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை பார்வையிட்ட அருணாச்சலேஸ்வரர்
உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், திரிபுரசுந்தரி சமேத திருமாமுடியீசுவரா்.
அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை அண்ணாமலையார் நேரில் சென்று பார்வையிடும் வைபவம் நடைபெற்றது.
கலசபாக்கம் செல்லும் சாலையில் நாயுடுமங்கலம் அருகே உள்ள தனகோட்டிபுரம் கிராமத்தில் ஏரியின் அருகில் அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை அப்பகுதி விவசாயிகளும் மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன.
இதனை ஆண்டுதோறும் கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெறும் ஆற்று திருவிழாவின் போது அருணாசலேஸ்வரர் வந்து பார்வையிடும் வைபவம் நடைபெறுவது வழக்கம்.
இதற்காக கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை உடனுறை அண்ணாமலையார் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி டிராக்டர் மூலம் சாலை வழியாக வந்தார்.
அப்போது கிராம பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து விவசாய நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை அண்ணாமலையாருக்கு மாலையாக அணிவித்தனர். மேலும் விவசாயம் மூலம் கிடைத்த அரிசியை கொண்டு பொங்கல் வைத்து அண்ணாமலையாருக்கு படைக்கப்பட்டு அங்கு உள்ளவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
செய்யாற்றில் ஆற்று திருவிழா
சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரும் காலமான உத்திராயணம் காலத்தை முன்னிட்டு ரதசப்தமி நாளான நேற்று கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்று திருவிழா என்னும் தீர்த்தவாரி நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மனுடன் அதிகாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. இதையடுத்து டிராக்டர் வாகனத்தில் திருவண்ணாமலையில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலசபாக்கம் செய்யாற்றுக்கு வந்தார். அப்போது அண்ணாமலையாருக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் சிறப்பு ஆராதனை செய்து வழிபட்டனர்.
மேலும் கலசபாக்கம் செய்யாற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள தென்பள்ளிப்பட்டு கிராம மக்களின் சார்பில் அண்ணாமலையாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஆற்று திருவிழாவுக்காக அண்ணாமலையார் பெரிய ரிஷப வாகனத்தில் செய்யாற்றில் இறங்க தொடங்கினார். அப்போது ஆற்றின் வடகரையில் கலசபாக்கம் திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரரும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி செய்யாற்றில் இறங்கினார். செய்யாற்றில் 2 சாமிகளும் நேருக்கு நேராக ஒரு சேர ஆற்றில் இறங்கி ஆனந்த நடனத்துடன் ஆடியபடியே வந்தனர்.
இதைத் தொடா்ந்து, முக்கிய நிகழ்வான தீா்த்தவாரியையெட்டி செய்யாற்றில் இருந்து புனிதநீா் கொண்டு வரப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு தீா்த்தவாரி நடைபெற்றது.
பின்னா், செய்யாற்றில் அமைக்கப்பட்ட பந்தலில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், திரிபுரசுந்தரி சமேத திருமாமுடியீசுவரா் சுவாமிகள் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கலசப்பாக்கம், போளூா், திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், சேத்துப்பட்டு, புதுப்பாளையம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu