காஞ்சி முருகர் கோயிலில் விலை உயர்ந்த மரங்களை வெட்டிய சமூகவிரோதிகள்

காஞ்சி முருகர் கோயிலில் விலை உயர்ந்த மரங்களை வெட்டிய சமூகவிரோதிகள்
X

வெட்டப்பட்டுள்ள மரங்கள்

திருவண்ணாமலை காஞ்சி முருகர் கோயிலில் விலை உயர்ந்த மரங்களை சமூக விரோதிகள் வெட்டி திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள காஞ்சி கிராமத்தில் பழமை வாய்ந்த புகழ்பெற்ற குன்று மேடு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் வருடம் தோறும் ஆடி கிருத்திகை திருவிழா, தை கிருத்திகை திருவிழா, மாத கிருத்திகை, கந்த சஷ்டி விழாக்கள் விமர்சையாக நடைபெறும் . அப்போது பக்தர்கள் பாலபிஷேகம் செய்தும் காவடி எடுத்தும் முருகப்பெருமானை வணங்குவர் .

அதேபோல் தைப்பூசத்தன்று மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருமண கோலத்தில் காட்சியளிப்பதும் பிக் கோயிலின் சிறப்பானதாகும். இவ்விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

இந்த காஞ்சி பாலசுப்பிரமணியர் திருக்கோயில் சுமார் 15 ஏக்கரில் அமைந்துள்ளது . கோயிலின் சுற்றுப்புறங்கள் மரங்கள் சூழப்பட்டிருக்கும். இங்கு வேப்பமரம், புளியமரம், அரசமரம், பலா மரம், தேக்கு மரம், காட்டுவா மரம் போன்ற பழமை வாய்ந்த விலை உயர்ந்த மரங்கள் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக யாருக்கும் தெரியாமல் சமூக விரோதிகள் சிலர் அப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். மேலும் கடத்திச் செல்வதற்காக சில மரங்கள் வெட்டி கீழே சாய்க்கப்பட்டுள்ளது. சில மரங்கள் பாதி வெட்டப்பட்டு எப்போது கீழே விழுமோ என்ற நிலையில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் கோவிலை சுற்றி உள்ள மரங்களை வெட்டிய அடையாளம் தெரியாத அளவிற்கு புதர்களால் மூடி வைத்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து அப்பகுதி கிராம மக்கள் சென்று பார்த்த போது ஏராளமான மரங்கள் வெட்டி எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

கோயில் நிலத்தில் இருந்த மரங்கள் திருடப்பட்டது தெரிய வந்ததும் பக்தர்கள் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். வனத்துறை கணக்கெடுப்புக்கு பிறகே எவ்வளவு மரங்கள் திருடப்பட்டது? என்னென்ன வகை மரங்கள் வெட்டி எடுத்த செல்லப்பட்டது? போன்ற விவரங்கள் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!