கலசப்பாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையார் ரத சப்தமி தீர்த்தவாரி சிறப்புகள்
கலசபாக்கம் அண்ணாமலையார் தீர்த்தவாரி
பலவகையான உயிர்கள் வாழும் இந்த பூமிக்கு ஒளியாகவும், உயிராற்றலை வழங்கும் கோளாக சூரிய பகவான் இருக்கிறார். பழங்காலந்தொட்டே சூரியனின் மகிமையை உணர்ந்த உலகின் பல நாகரீகங்களை பின்பற்றிய மக்கள் சூரியனுக்கு பல வகையான விழாக்கள் கொண்டாடி வந்திருக்கின்றனர். அந்த வகையில் நமது நாட்டில் தை மாத வளர்பிறை காலத்தில் வரும் சப்தமி தினத்தில், சூரியனுக்கு கொண்டாடப்படும் ரத சப்தமி தினம் மற்றும் அன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தை மாதம் ரதசப்தமி தினத்தன்று அண்ணாமலையார் கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வதும் தனித்துவம் வாய்ந்தது. கலசப்பாக்கத்தில் திருமா முடீஸ்வரரர் ஆலயம் உள்ளது. அங்கு இறைவனின் முடி இருப்பதாக கருதப்படுகிறது. அந்த பகுதியில் ஓடும் செய்யாற்றில் ஒரு தடவை கலசம் ஒன்று மிதந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த கலசத்தை இறைவனே அனுப்பி வைத்ததாக அப்பகுதி மக்கள் நினைத்தனர். இதையடுத்து அந்த கலசத்தை எடுத்து மக்கள் பூஜித்து வருகிறார்கள். இதனால்தான் அந்த ஊர் கலசப்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பகுதி செய்யாற்றுக்கு மற்றொரு சிறப்பு உண்டு. இந்த ஆறுக்கு சேயாறு என்ற பெயரும் உண்டு. இது முருகப்பெருமான் உருவாக்கிய ஆறு ஆகும். ஈசனுக்கு சேயாக அதாவது மகனாக முருகப்பெருமான் உள்ளதால் அவருக்கு உருவாக்கிய ஆறு சேயாறு என்று அழைக்கப்படுகிறது. அவர் ஏன் இந்த ஆற்றை உருவாக்கினார் என்பதற்கும் வரலாறு உள்ளது.
ஈசனின் சாபத்துக்கு உள்ளான பார்வதி பூமிக்கு வந்து தவம் இருந்தார். பிறகு அவர் ஈசனிடம் இடப்பாகம் பெறுவதற்காக காஞ்சீபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நடந்து சென்றார்.வழியில் அவருக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. இதை அறிந்த முருகப்பெருமான் தனது வேலாயுதத்தால் பூமியை கிழிக்க ஆறு உருவானது. அம்பாள் அதில் நீர் அருந்தி தாகத்தை தணித்தார். அந்த ஆறுதான் சேயாறு. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் திருவூடல் நடந்து அண்ணாமலையாரும், உண்ணாமலையம்மனும் ஊடல் துறந்து மகிழ்ச்சி பொங்க இந்த செய்யாற்றுக்கு வந்து தீர்த்தம் ஆடுவதாக சொல்கிறார்கள்.
செய்யாற்றுக்கு செல்லும்போது ஆற்றை கடக்கக்கூடாது என்ற ஐதீகம் இருப்பதால் மேட்டுப்பாளையம் கிராமம் வழியாக சுவாமி புறப்பாடு நடைபெறும். வழிநெடுக மக்கள் மண்டகப்படி நடத்தி அண்ணாமலையாரை வழிபடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சிறப்புமிக்க இந்த தீர்த்தவாரி திருவிழா நாளை நடைபெற உள்ளது. நாளை இரவு முழுவதும் கலசப்பாக்கத்தில் அண்ணாமலையார் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
பின்பு நாளை மறுதினம் காலை திருவண்ணாமலைக்கு திரும்பும் வழியில் உள்ள அண்ணாமலையாருக்கு சொந்தமான தனகோட்டி புறத்திலுள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு தானமாக வழங்கிய பல ஏக்கர் விவசாய நிலத்தினை பார்வையிடுவார்.
தற்போது தை மாதம் நெல் அறுவடை முடிந்த நிலையில் தனது நிலத்தை அண்ணாமலையார் சென்று பார்வையிடுவது சிறப்பாகும்.
அண்ணாமலையார் பங்கேற்கும் தீர்த்தவாரிகளில் கலந்து கொண்டால் வினைகள் தீர்ந்து ஈசனின் திருப்பாதத்தை அடைய முடியும் என்பது நம்பிக்கையாகும். மேலும் தீர்த்தவாரிகளில் பங்கேற்கும் பக்தர்களின் ஆன்மா அண்ணாமலையாரின் கருணை பார்வையால் குளிர்ச்சி பெறுவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தீர்த்தவாரியை தவறவிடாதீர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu