ஜவ்வாது மலையில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜவ்வாது மலையில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்!
X

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்ரிகிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ

ஜவ்வாது மலை பகுதியில் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜவ்வாது மலை பகுதியில் சாலையை சேதப்படுத்திய வனத்துறை அதிகாரிகளை கண்டித்து போளூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதியில் மலைவாழ் கிராமங்களான குட்டக்கரை, பாதிரி, பெரிய வள்ளி, பட்டான் கோவிலூர், மஞ்சு ஊத்தூர் ஆகிய மலை கிராமங்களுக்கு முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. அதனை வனத்துறையினர் முறையாக அனுமதி பெறவில்லை எனக் கூறி சிமெண்ட் சாலையைஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து எறிந்தனர். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த மலைவாழ் மக்கள் வனத்துறை அதிகாரிகளை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைப்பதாக கூறி அங்கிருந்து சென்றனர்.

ஆனால் சாலையை அமைப்பதாக கூறி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும் வனத்துறையினர் சாலை அமைக்கவில்லை. இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கவனத்திற்கு மலை வாழ் மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டதன் காரணமாக மக்கள் வரிப்பணத்தை வீணடித்த அதிகாரிகளை கண்டித்து ஜமுனாமரத்தூர் மத்திய பேருந்து நிலையம் அருகே போளூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். இதையடுத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியபோது,

மலைவாழ் மக்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட சாலையை அதிகாரிகளின் அதிகாரப் போக்கினால் இன்று போடப்பட்ட சாலை உடைத்து எறியப்பட்டு இருக்கிறது. உடனடியாக சாலை அமைத்து தரப்பட வேண்டும், தவறு செய்த அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் வெள்ளையன், அசோக், ஒன்றிய குழு துணை தலைவர் ராமகிருஷ்ணன் மாநில மாவட்ட ஒன்றிய நகர செயலாளர், பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அணி அமைப்பாளர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story