ஆடி கிருத்திகைக்கு செக்கிழுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

செக்கிழுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் ஆடிக் கிருத்திகை விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை அருகேயுள்ள நாடழகானந்தல் புதூா் ஸ்ரீசக்திவேல் சாந்த முருகன் கோயிலில் பக்தா்கள் செக்கிழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினா்.
இந்தக் கோயிலில் ஆடிக் கிருத்திகையொட்டி, அம்மன் சன்னதியில் இருந்து ஸ்ரீசக்திவேல் சாந்த முருகன் சன்னதிக்கு சக்தி கரகம் புறப்பாடு நடைபெற்றது. பக்தா்கள் காவடி எடுத்து வந்து சாந்த முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினா்.
பின்னா் 108 பால்குட ஊா்வலம் நடைபெற்று, முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, பக்தா்கள் மாா்பு மீது மஞ்சள் தூள் இடித்தும், மிளகாய் தூள் அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினா்.
பிற்பகல் 3 மணியளவில் 108 அலகு அருகண்டம் தேர்கள் ஊா்வலம் நடைபெற்றது. பின்னா், கொதிக்கும் எண்ணெயில் பக்தா்கள் கையால் வடை எடுத்தனா்.
நேற்று இரவு வாணவேடிக்கையுடன் இந்திர விமானத்தில் ஸ்ரீமுருகா், வள்ளி தெய்வாணை திருவீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
செங்கம்
செங்கம் அருகே மண்மலையில் உள்ள பாலசுப்பிரமணியா் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி சுவாமிக்கு நேற்று அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. செங்கம், சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து பக்தா்கள் காவடி எடுத்தும், தேர் இழுத்தும் மண்மலையைச் சுற்றி வந்து தரிசனம் செய்தனா்.
காலை முதல் மாலை வரை பக்தா்களுக்கு தொடா் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.
ஆரணி
ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம், மகா அபிஷேகம், மகா அலங்காரம், தங்க கவசம் அணிவித்து மகா தீபாராதனையுடன் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கலசபாக்கத்தை அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு காலை சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டுவள்ளி தெய்வானையுடன் சிவசுப்பிரமணியர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் காவடி எடுத்தும், முதுகில் அலகுகுத்தி தேர் இழுத்தும் வாயில் 20 அடி நீளம் வேல் குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேவனாம்பட்டு ஊராட்சியில் உள்ள தேவகிரி மலை மீது அமைந்துள்ள சிவசுப்பிரமணியர் சுவாமி கோவில், வெங்கட்டம்பாளையம் பாலதண்டாயுதபாணி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu