ஜவ்வாதுமலையில் 24ம் ஆண்டு கோடை விழா இன்றும், நாளையும் கொண்டாட்டம்

ஜவ்வாதுமலையில் 24ம் ஆண்டு கோடை விழா இன்றும், நாளையும் கொண்டாட்டம்
X

கோடை விழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

ஜவ்வாதுமலையில் 24ம் ஆண்டு கோடை விழாவை அமைச்சர் எ.வ.வேலு இன்று தொடங்கி வைக்கிறார்.

ஜவ்வாதுமலையில் 24ம் ஆண்டு கோடை விழா இன்றும் நாளையும் விமரிசையாக நடக்கிறது. விழாவை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற கோடை வாசஸ்தலங்களில் முக்கிய இடம் பெற்றது ஜவ்வாதுமலை. கிழக்கு தொடர்ச்சி மலையின் அங்கமாக கிழக்கு தொடர்ச்சி மலையின் அங்கமாக இயற்கை எழில் சூழ்ந்த மலைப் பகுதியாகும் இந்த ஜவ்வாது மலையில் எப்போதுமே சந்தனம் மணக்கும். கொம்புத்தேன், மலைத்தேன், மர பொந்து தேன் ,பெட்டி தேன், கொசு தேன் என இங்கு உருவாகும் தன்மையில் அடிப்படையில் பல்வேறு வகைகளில் தேன்கள் உற்பத்தியாகிறது.

இங்கு கிடைக்கும் தேனில் உள்ள சுவைப்போல, வேறு எங்கும் இருப்பதில்லை என்பது அதன் தனித்துவமாகும். கடல் மட்டத்தில் இருந்து 2300- 3000 அடி உயரத்தில் உள்ளது ஜவ்வாது மலை. ஒரு காலத்தில் சந்தனத்துக்கு புகழ் பெற்றதாக இருந்தது. மருத்துவத்துக்கு பயன்படும் அரியவகை மூலிகைகள் இங்கு ஏராளமாக உள்ளன.

இந்த பருவநிலைக்கு உகந்ததான சாமை, தினை, கேழ்வரகு, கொள்ளு, புளி, மா, கொய்யா, பலா, சீதாபழம், விளாம்பழம், லிச்சி, மிளகு போன்றவை இங்கு விளைகிறது. ஜவ்வாதுமலை பகுதியில் சிறு, சிறு குடியிருப்புகளாக 278 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் சுமார் 50 ஆயிரம் பழங்குடியின மக்களின் பிரதான வாழ்வாதாரம் மலை வளத்தை சார்ந்தே உள்ளன. இன்னும், பழமையும், பழங்குடியின பாரம்பரியமும் மாறாமல் பெரும்பாலானோர் வாழ்கின்றனர் என்பது தனிச்சிறப்பு. ஜவ்வாதுமலையில் கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த மலைப்பயணம் சுகமானது. ஜவ்வாதுமலையில் அமைந்துள்ள கோலப்பன் ஏரி படகு சவாரி, பீமன் நீர்வீழ்ச்சி, குழந்தைகள் பூங்கா, கண்ணாடி மாளிகை, நூற்றாண்டுகள் பழமையான நீர்மத்தி மரம் என எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கிறது.

இந்நிலையில், மலைவாழ் மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக அமையும் வகையில் ஆண்டுதோறும் ஜவ்வாதுமலையில் கோடை விழா 1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, 24வது ஆண்டு கோடை விழா இன்றும் நாளையும் ஜவ்வாது மலையில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஜவ்வாது மலைப்பகுதி ஜமுனாமரத்தூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு கோடை விழா தொடங்குகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்குகிறார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். டிஆர்ஓ ராமபிரதீபன் வரவேற்கிறார்.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் வேலு கலந்து கொண்டு கோடை விழாவை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில், மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், எம்பிக்கள் அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் கிரி, சரவணன், அம்பேத்குமார், ஜோதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். விழாவை முன்னிட்டு, 50க்கும் மேற்பட்ட அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சிகள் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கண்கவர் மலர் கண்காட்சி, நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், வீர விளையாட்டுக்கள், சாகச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை, போளூர், ஆலங்காயம், அமிர்தி, செங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது.

கோடை விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!