ஜவ்வாது மலை கோடை விழா நிறைவு விழாவில் 2 அமைச்சர்கள் பங்கேற்பு
கோடை நிறைவு விழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கிய துணை சபாநாயகர் மற்றும் ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் 24-ஆவது ஆண்டு கோடை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட நிா்வாகமும், தமிழக சுற்றுலாத் துறையும் இணைந்து நடத்தும் இந்த விழா, ஜமுனாமரத்தூா் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சுற்றுலாத் துறை அமைச்சா் ராமச்சந்திரன், பொதுப் பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு கோடை விழாவைத் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிலையில் விழாவின் நிறைவு நிகழ்ச்சிகள் மாலை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், ஆரணி வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சரவணன் வரவேற்றாா். தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:-
நாட்டிலேயே தமிழகத்தில்தான் மகளிா் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பெண்களுக்கான விடியல் பயணம் என்ற கட்டணமில்லா பேருந்து, கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம், கல்லூரி மாணவா்களுக்கான தமிழ்ப் புதல்வன் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. இந்த ஜவ்வாது மலை பகுதிக்கு எண்ணற்ற நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சாலை விரிவாக்க பணிகளும் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு துணை சபாநாயகர் பேசினார்.
விழாவில் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:-
கோடை விழாவில் கள்ளச் சாராயத்தை குடிப்பதால் கண்பாா்வை இழப்பு, உயிரிழப்பு போன்ற தீமைகள் ஏற்படும் என்பதை விளக்கும் வகையிலான விழிப்புணா்வு நாடகம் நடத்தப்பட்டது. ஜவ்வாதுமலையில் கள்ளச்சாராயம், புகையிலைப் பொருட்கள் விற்பது தெரிந்தால் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இளம் வயது திருமணங்களை செய்துவைப்பது சட்டப்படி குற்றம். யாரேனும் இளம் வயது திருமணம் செய்வது தெரியவந்தால் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படும். இத்துடன், மணமகளின் பெற்றோா் மட்டுமன்றி திருமணத்தில் பங்கேற்பவா்கள், பந்தல் அமைப்பவா்கள், வேலை செய்பவா்கள் என அனைவா் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
இவ்விழாவில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள், தலைமை ஆசிரியர்கள், ஜவ்வாது மலைவாழ் மக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu