ஜவ்வாது மலையில் டி.ஐ.ஜி.தலைமையில் 150 போலீசார் நடத்திய சாராய வேட்டை

சாராயம் காய்ச்ச மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட கிராம பொதுமக்கள்.
ஜவ்வாதுமலை பகுதியில் டி.ஐ.ஜி.தலைமையில் 150 போலீசார் நடத்திய கள்ளச்சாராய வேட்டையில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட அடுப்புகளை போலீசார் அழித்தனர். அதனை தொடர்ந்து விழிப்புணர்வு முகாமில் சாராயம் காய்ச்ச மாட்டோம் என கிராம மக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நம்மியம்பட்டு மற்றும் பால்வாடி ஆகிய மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும், கடத்துபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் பிடிக்க வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீசார் சாராய வேட்டை நடத்தினர்.
போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தசாமி, திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150 போலீசார் 4 குழுக்களாக பிரிந்து காலை 6 மணி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய அடுப்புகளை அவர்கள் அடித்து நொறுக்கி உடைத்தனர்.
அதனை தொடர்ந்து பகல் 12 மணி அளவில் நம்மியம்பட்டு கிராம பொதுமக்களிடம் மதுவிலக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் தங்கள் கணவர்கள் மற்றும் பிள்ளைகளை சாராய தொழிலில் ஈடுபடுத்தாமல் இருக்கவும் குடும்ப பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் பிள்ளைகளை படிக்க வைத்தல், விவசாய தொழில் செய்ய ஊக்குவித்தல் போன்ற அறிவுகளை எடுத்துரைக்கப்பட்டது.
படித்த இளைஞர்கள் கல்லூரியில் சேர்ந்து மேல்படிப்பு படிக்க காவல்துறை சார்பில் உரிய உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக அப்போது டி.ஐ.ஜி.முத்துசாமி தெரிவித்தார். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து போலீசாரிடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் அவர் கூறினார்.
கூட்டத்தின் முடிவில் நம்மியபட்டு கிராம பொதுமக்கள் எங்கள் கிராமத்தில் இனி சாராயம் காய்ச்ச மாட்டோம் யாரையும் காய்ச்சவும் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. முத்துசாமி ஜமுனாமுத்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று பார்வையிட்டு போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu