தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியாகிறது

தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியாகிறது
X
திருவண்ணாமலை மாவட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியாகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளில் 123 வார்டு கவுன்சிலர்களும், செங்கம் புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், போளூர், களம்பூர், கண்ணமங்கலம், பெரணமல்லூர், சேத்துப்பட்டு, தேசூர் ஆகிய 10 பேரூராட்சிகளில் 150 வார்டு கவுன்சிலர்களும் இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதையொட்டி, கடந்த மாதம் 29ம் தேதி முதல் கடந்த 4ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டது.

திருவண்ணாமலை நகராட்சியில் 329 பேரும், ஆரணி நகராட்சியில் 198 பேரும், வந்தவாசி நகராட்சியில் 153 பேரும், செய்யாறு நகராட்சியில் 161 பேரும் வேட்பு மனுதாக்கல் செய்தனர். அதேபோல், பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட, செங்கத்தில் 111 பேரும், சேத்துப்பட்டில் 96 பேரும், தேசூரில் 57 பேரும், களம்பூரில் 69 பேரும், கண்ணமங்கலத்தில் 71 பேரும், கீழ்பென்னாத்தூரில் 80 பேரும், பெரணமல்லூரில் 49 பேரும், போளூரில் 87 பேரும், புதுப்பாளையத்தில் 75 பேரும், வேட்டவலத்தில் 57 பேரும் மனுதாக்கல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் நடந்த வேட்புமனுக்கள் பரிசீலனையில், திருவண்ணாமலை நகராட்சியில் 17, ஆரணி நகராட்சியில் 3, வந்தவாசி நகராட்சியில் 6, செய்யாறு நகராட்சியில் 2 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல், செங்கம் பேரூராட்சியில் 1, சேத்துப்பட்டு பேரூராட்சியில் 1, களம்பூர் பேரூராட்சியில் 2, பெரணமல்லூர் பேரூராட்சியில் 1 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

4 நகராட்சிகளில் 815 மனுக்கள் மற்றும் 10 பேரூராட்சிகளில் 747 மனுக்கள் உள்பட மொத்தம் 1,562 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வௌியிடப்படும். அதன்படி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு 30 சின்னங்களை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது.

அதில், தென்னை மரம், சாலை உருளை, தண்ணீர் குழாய், பூப்பந்து மட்டை, திருகு ஆணி, தீப்பெட்டி, கைப்பை, கிடார், அலமாரி, அடையாள குறி, மறை திருக்கி, வைரம், உலக உருண்டை, முகம் பார்க்கும் கண்ணாடி, அசைந்தாடும் நாற்காலி, புட்டி, ஊஞ்சல், நீளக்குவளை, மேல்சட்டை (கோட்டு), கோப்பு அடுக்கும் அலமாரி, முள் கரண்டி, கொதி கெண்டி(கெட்டில்), ஹாக்கி மட்டையும் பந்தும், மகளிர் பணப்பை, மேஜை விளக்கு, கொம்பு (இசை கருவி), கழுத்துக்கச்சை (டை), அரிக்கன் விளக்கு, கரண்டி, உலாவிற்கான தடி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சின்னம் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும்.

இது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, அந்த கட்சிகளின் தலைைம அளிக்கும் கடிதத்தின் அடிப்படையில் கட்சி சின்னம் ஒதுக்கப்படும். மேலும், மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 297 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சுயேச்சை சின்னங்களை ஒதுக்குவதில் முன்னுரமை அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து, சுயேச்சை வேட்பாளர்களுக்கு அவர்கள் கேட்டும் சின்னங்களில் ஏதேனும் ஒன்று ஒதுக்கப்படும். ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கேட்கும் நிலை ஏற்பட்டால், அவர்களுடைய பெயர்களின் முதல் எழுத்து வரிசை முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படும். அதிலும், ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு பொதுவாக அமைந்தால், குலுக்கல் மூலம் சின்னம் ஒதுக்கப்படும்' என்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!