அடுத்த ஷாக்: வகுப்பறையில் ராகிங். சீரழியும் அரசுப் பள்ளி மாணவர்கள்
செங்கம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இயங்கி வருகிறது செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பல துறை வல்லுநர்கள் என பலர் இந்த பள்ளியில் படித்தவர்கள்.
இந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பள்ளியின் வகுப்பறையிலேயே சக மாணவர்களை ராகிங் செய்து நடனம் ஆட சொல்லியும், ஒரு மாணவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு மற்ற மாணவர்களை விசிறி மூலம் விசிற வைத்துள்ளனர்.
இதில் நடனம் ஆடாத மாணவர்களையும், காற்று வீசாத மாணவர்களையும் உடன் பயிலும் மாணவர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை ஆசிரியர்கள் யாரும் கண்டுகொள்ளாததால் இச்சம்பவம் குறித்து யாரிடமும் புகார் தெரிவிக்க முடியாது என சக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமல்லாது, மாணவர்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை பறித்துக் கொண்டும், வீட்டிலிருந்து எடுத்து வரும் உணவை எடுத்து உண்டும் பல்வேறு இடையூறுகளை அடாவடி மாணவர்கள் செய்துவருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவன் ஆசிரியரை அடிக்கப் பாய்ந்ததும், வேலூரில் பள்ளி மாணவர்கள் மேஜைகளை உடைப்பதுமான காட்சிகளை கண்டோம். இப்போது, சக மாணவர்களுக்கே ராகிங் கொடுமை. அதுவும், ராகிங் என்பதை பள்ளிப்பருவத்தில் இதுவரை கேள்விப்பட்டதில்லை.
எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்? அரசு இதனை தீவிரமாக எடுத்துக் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்காவிடில் ஒரு சமுதாய சீர்கேட்டிற்கு வழிவகுக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu