பூங்காக்கள், நீச்சல் குளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை 5-ந்தேதி வரை நீட்டிப்பு

பூங்காக்கள், நீச்சல் குளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை 5-ந்தேதி வரை நீட்டிப்பு
X

சாத்தனுர் அணை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளுக்கு விதிக்கப்பட்ட தடை 5ம் தேதி வரை நீட்டித்து கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளுக்கு விதிக்கப்பட்ட தடை 5-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் தளர்வுகள் அளிக்கப்படுவதுடன் சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை நகரம் மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகள் நாளை மறுநாள் 1-ந்தேதி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி மற்றும் அரசின் இதர நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒரே நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்தவும், தேநீர் சாப்பிடவும் அனுமதிக்கப்படுவார்கள்.

கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளுக்கு வருகைதரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும். கடை, உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

ஆய்வின்போது கடை, உணவக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாதது மற்றும் தடுப்பூசி போடாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதுடன் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது.

மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையை அடைய உதவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil