வறண்ட ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் அமைக்கும் இளைஞர்கள்
கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியபாடி கிராமத்திலுள்ள பெரிய ஏரி சுமார் 92 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த பெரிய ஏரிக்கு நீர்வரத்து இன்றி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வறண்ட நிலையில் உள்ளது. இந்த ஏரியை சுற்றி 4,500 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் வகையில் இந்த ஏரிப்பாசனம் உள்ளது.
கடந்த ஆட்சியின் போது செண்பக தோப்பு அணையிலிருந்து வெளியேறும் நீர் நாகநதி வழியாக பல்வேறு கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு செல்லும் வகையில் 6 கோடி மதிப்பில் பணி மேற்கொள்ள பூமி பூஜை போடப்பட்டது. இந்த செக் டேம்மில் இருந்து புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு நீர் சென்றடையும். புதுப்பாளையம் ஏரியில் இருந்து அரியபாடி ஏரிக்கு சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாயை சீரமைக்க வேண்டியிருந்தது.
இந்நிலையில் அரிய பாடி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து ஏரி கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் என அனைத்து மக்களும் இலவசமாக ஏரிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியை மேற்கொண்டு வரும் நிர்வாக பொறுப்பாளர்கள் பொது மக்களிடம் நிதி திரட்டி வருகின்றனர்.
இதன் மூலம் ஏரி கால்வாய் சீரமைப்பு அதற்கு தேவையான பொருட்களை வாங்கியும், ஜேசிபி இயந்திரம் கொண்டு கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏரி கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள இடங்களை அந்த நிலத்தின் உரிமையாளர்களிடம் பேசி கால்வாயை சீரமைத்தனர். ஏரி கால்வாய் செல்லும் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
இந்த சீரமைப்பு பணியில் சுமார் 60 சதவீதம் அளவிற்கு முடிவடைந்த நிலையில் இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவு பெற்று தற்போது பருவமழை காலத்தில் மழை நீர் மற்றும் அணை நீர் ஆற்றுக்கால் வழியாக ஏரிக்கு நீர் வரும் நிலையில் உள்ளது.
தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும், ஊரக வளர்ச்சித் துறையினரும் தேவையான திட்ட பணிகளை இந்த ஏரிக்கு செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu