கண்ணமங்கலம் அருகே பெண் கொலை: 24 மணி நேரத்தில் குற்றவாளியை மடக்கிப்பிடித்த போலீசார்

கண்ணமங்கலம் அருகே பெண் கொலை: 24 மணி நேரத்தில் குற்றவாளியை மடக்கிப்பிடித்த போலீசார்
X
கண்ணமங்கலம் அருகே பெண் கொலை சம்பவத்தில் 24 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் ஏரியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் இருப்பதை பார்த்து அங்கு ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற விவசாயிகள் கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பெயரில் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து மோப்பநாய் வர வைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. பின்னர் சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

முதல்கட்ட விசாரணையில், இறந்த பெண்ணிடம் ஆவடியிலிருந்து பூந்தமல்லி வந்ததற்கான பேருந்து பயணச்சீட்டு இருந்துள்ளது. அவா் அணிந்திருந்த கண்ணாடி சுங்குவாா் சத்திரத்தில் வாங்கியது என அந்த கண்ணாடி கவரின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸாா், கண்ணாடி கடைக்காரரை தொடா்பு கொண்டு இறந்த பெண் ஸ்ரீபெரும்புதுரைச் சோ்ந்த அலுமேலு எனக் கண்டறிந்தனா்.

மேலும், அந்தப் பெண் கடந்த 17-ஆம் தேதி முதல் கண்ணமங்கலம், புதுப்பேட்டை, கொளத்தூா் பகுதியில் சாமியாா் ஒருவருடன் சுற்றிக் கொண்டிருந்தார் என்ற தகவலும் போலீசாருக்கு கிடைத்தது.

இறப்பதற்கு முதல்நாள் மாலை ஏரிக்கரை அருகே இருவரையும் பாா்த்ததாகவும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தெரிவித்தனா்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் இருந்த நபா் யாா், கொலைக்கான காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸாா் 3 தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்த தீவிர விசாரணையில் அந்தப் பெண்ணுடன் இருந்த நபர் சாமியார் தஞ்சன் என தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் சாமியார் தஞ்சன் குறித்து விசாரித்ததில் அவர் சென்னை குன்றத்தூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனி படையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது விசாரணையில் சாமியார் தஞ்சன் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது அலமேலு சிவன் மீது கொண்ட பக்தியால் திருவண்ணாமலையில் முக்தி அடைய வேண்டும் என்று கூறியதாகவும் அதனால் தான் கொளத்தூரில் ஏரிக்கு அழைத்துச் சென்று கொலை செய்து முக்தி அடைய வைக்கிறேன் என கூறி போலீசாரை அதிர வைத்து குழப்பினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சாமியாரிடம் மேலும் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சாமியார் அலமேலு என்பவரிடம் கடனாக பணம் பெற்றுள்ளதாகவும் அதனை திருப்பித் தர முடியவில்லை என்றும் இதனால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது ஒரு மாதத்தில் பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தேன்.

இந்நிலையில் அவரை கண்ணமங்கலம் அருகே உள்ள எனது சொந்த ஊரான ரெட்டிபாளையம் கிராமத்திற்கு அழைத்து வந்து கொலை செய்தேன் என கூறினார்.

பின்னர் கொலை வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சாமியார் தஞ்சனை ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பெண் கொலை சம்பவம் நடந்தேறி 24மணி நேரத்தில் கொலையாளியை போலீசார் மடக்கி பிடித்ததை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் பொதுமக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!