ஆரணியில் இம்முறையாவது உதிக்குமா உதயசூரியன்? தொண்டர்கள் எதிர்பார்ப்பு

ஆரணியில் இம்முறையாவது உதிக்குமா உதயசூரியன்? தொண்டர்கள் எதிர்பார்ப்பு
X

சென்னையில் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்த அமைச்சர் உதயநிதி.

ஆரணி தொகுதியில் திமுக தான் போட்டியிடவேண்டும். காங்கிரசுக்கு தரமாட்டோம் என திமுக தொண்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதில் திமுக, காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள போட்டியின் காரணமாக,சென்னையில் இன்று நடைபெற்ற திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியிடம் ஆரணி தொகுதியை திமுகவிற்கு ஒதுக்குங்கள் என திமுகவினர் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாக திருவண்ணாமலை தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

அதற்கு தலைமை கழக நிர்வாகிகள் தலைமை யாரை வேட்பாளராக சொல்கிறார்களோ அவர்களின் வெற்றிக்காகவும் தி.மு.க.வின் வெற்றிக்காகவும் பாடுபடுங்கள் என அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆரணி தொகுதியை ஏன் தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும் என அப்பகுதி தி.மு.க. மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:-

தொகுதி சீரமைப்புக்கு பிறகு ஆரணி நாடாளுமன்ற தொகுதி கடந்த 2009-ல் உருவானது. 2009, 2019-ல் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது. திமுக ஆதரவு அலையால் 2 முறையும் வெற்றி கண்டது.

2014-ல் திமுக போட்டியிட்டு, அ.தி.மு.க.விடம் தோல்வியை தழுவியது. தொகுதி சீரமைப்புக்கு முன்பு வந்தவாசி நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோது 1967 மற்றும் 1971-ல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு ஜி.விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார். 1962, 1980, 1984, 1989, 1991-ல் காங்கிரஸ், 1977-ல் அதிமுக, 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ், 1998 மற்றும் 1999-ல் பாமக, 2004-ல் மதிமுக வெற்றி பெற்றுள்ளது.

2 முறை மட்டுமே திமுக வெற்றி.

வந்தவாசி மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்றுள்ள 15 தேர்தல்களில் 2 முறை மட்டுமே வெற்றியை தி.மு.க. ருசித்துள்ளது. அரை நூற்றாண்டாக (53 ஆண்டுகளாக) தி.மு.க.வுக்கு வெற்றி கிட்டவில்லை என்பது வேதனையாக உள்ளது. எனவே, ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் வரக்கூடிய தேர்தலில் தி.மு.க. நேரடியாக களம் இறங்க வேண்டும், அரை நூற்றாண்டுக்கு பிறகு உதயசூரியன் உதிக்க வேண்டும். தொண்டர்களின் உணர்வுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியை பெற்றுத் தருவதில் அமைச்சர் எ.வ.வேலுவும் உறுதுணையாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. சுழற்சி முறையில் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்தால் தேர்தல் களத்தில் திமுக தொண்டர்கள் சூறாவளியாக சுழன்று பணியாற்றி தலைவரின் பாதத்தில் வெற்றிக்கனியை சமர்ப்பிப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

காங்கிரஸ் தலைமை வலியுறுத்தும்

இது குறித்து காங்கிரஸ் தரப்பில் விசாரித்த போது, “ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் திமுக போட்டியிட, அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருவது உண்மைதான். அதேநேரத்தில், ஆரணி தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றியை பெற்றுள்ளது.

ஆரணி தொகுதியில் 2 முறையும், தொகுதி சீரமைப்புக்கு முன்பு வந்தவாசி தொகுதியில் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஆரணி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள எம்.கே.விஷ்ணு பிரசாத் மீண்டும் போட்டியிடுவதற்கான ‘வாய்ப்புகள்’ உள்ளன. டெல்லி தலைமையின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், ஆரணி நாடாளுமன்ற தொகுதியை திமுக தலைமையிடம் கேட்டு பெறுவதில் தமிழக காங்கிரஸ் தலைமை கவனம் செலுத்தும்” என்றனர்.

இதனிடையே திமுக ஐ.டி. விங்கும் களத்தில் இறங்கி இருக்கிறது. இப்போதே ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் யார் ? என்ற கருத்துக்கணிப்பை நடத்த தொடங்கி இருப்பதும் விஷ்ணு பிரசாத் வயிற்றில் புளியை கரைத்து இருக்கிறது. திமுகவை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

இந்த முறை திமுகவே களம் இறங்க தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ஆரணி நாடாளுமன்ற தொகுதி தங்களுக்கு வேண்டும் என இரு கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் ஆரணி தொகுதி யாருக்கு வேலுவின் முடிவு என்ன என்பதை அறிய அனைவரும் காத்திருக்கின்றனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....