கோரிக்கையை நிறைவேற்றாத திமுகவுக்கு ஏன் வாக்கு: அன்புமணி ராமதாஸ் கேள்வி

கோரிக்கையை நிறைவேற்றாத திமுகவுக்கு ஏன் வாக்கு: அன்புமணி ராமதாஸ் கேள்வி
X

பாமக வேட்பாளரை ஆதரித்து பேசிய அன்புமணி ராமதாஸ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பாமக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திருவண்ணாமலைக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினாா்

ஆரணி மக்களவைத் தொகுதியின் பாமக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நேற்று இரவு நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாவட்டம். அதைப் பிரிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை.

இந்த மாவட்டத்துக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் 13 வாக்குறுதிகளை அளித்தாா். அதில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.

நந்தன் கால்வாய் திட்டம், அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும், கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம், ஆரணியில் பட்டு ஜவுளி தொழிற்சாலை மற்றும் ஜவுளி பூங்கா, ஆரணி மற்றும் செய்யாறில் புதிய பேருந்து நிலையம், செய்யாறில் இஎஸ்ஐ மருத்துவமனை, வந்தவாசி பாலிடெக்னின் கல்லூரி, கீழ்பென்னாத்தூரில் தொழிற் பயிற்சி நிலையம், செங்கம், கலசப்பாக்கம் மற்றும் தண்டராம்பட்டில் நறுமண தொழிற்சாலை, கலசப்பாக்கம், செய்யாறு மற்றும் செங்கத்தில் குளிர்பதன உணவு கிடங்குகள், பெரணமல்லூரியில் தானிய கிடங்கு, மேல்செங்கத்தில் வேளாண்மை கல்லூரி, செய்யாறு - தென்பெண்ணையாறு இணைப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும், சாத்தனூர் - கடலாடி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என 3 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த 13 வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாவட்டம். அதைப் பிரிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையை நிறுவனர் ராமதாஸ் வைத்து வருகிறார். நிர்வாகத்துக்கு ஏதுவாக பிரிக்க வேண்டும்.

கோரிக்கையை நிறைவேற்றாத திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். மக்கள் நலனுக்காக ஐநா மன்றத்தில் பேசிய பாமக வேட்பாளர் கணேஷ்குமாருக்கு வாக்களியுங்கள். தமிழகத்தில் அதிக போதை பொருள் புழக்கத்தில் உள்ள மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டமாகும். போதை பழக்கத்துக்கு அடிமையாகி இளைஞர்கள் சீரழிந்துள்ளனர்.

செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை அவசியம் வேண்டும். ஆனால், விளை நிலங்களை அழித்து, முப்போகம் விளையும் நிலங்களை அழிக்க வேண்டும். விளை நிலங்களை அழித்தால், சோறு கிடைக்காது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சோறு போட்ட மண். மேலும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சோறு போடப்போகும் மண்.

தாய், தந்தைக்கு பிறகு விவசாயிகளை கடவுளாக பார்க்கிறேன். விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் கட்சி பாமக. அழிக்கும் கட்சி திமுக. அவர்களுக்கும் விவசாயத்துக்கு சம்மதம் இல்லை. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்கின்றனர். சாராயம், போதை பொருள் விற்பனை செய்பவர்கள் வெளியே சுற்றுகின்றனர்.

இரு கட்சிகளும் காலாவதியான கட்சிகள். அதனால்தான், பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம். இது காலத்தின் கட்டாயம். பாமக வேட்பாளரை வெற்றி பெற செய்தால் , தமிழகத்தில் 2026-ல் திமுக மற்றும் அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சி அமையும். மூன்றவாது முறையாக மோடி பிரதமராக வருவார். சிந்தித்து வாக்களியுங்கள்.

ஆரணி மக்களவைத் தொகுதிபாமக வேட்பாளர் கணேஷ்குமாருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என அன்புமணி ராமதாஸ் பேசினார்.

நிகழ்ச்சியில் பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..