திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் நாளை  வாக்குப்பதிவு
X

வாக்குப்பதிவு மையங்கள் வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர்

திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது, 30.29 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.

அதையொட்டி, 3,482 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 30.29 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முன்னேற்பாடுகளை, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்து வருகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகளும், ஆரணி தொகுதியில் 1,760 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு, உரிய வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 15,33,099 வாக்காளர்களும், ஆரணி மக்களவைத் தொகுதியில் 14,96,118 வாக்காளர்களும் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் நடத்தும் பணியில், சுமார் 14 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு, ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை தொகுதியில் சி.என்.அண்ணாதுரை(திமுக), எம்.கலியபெருமாள் (அதிமுக), அஸ்வத்தாமன் (பாஜக) உள்பட 31 வேட்பாளர்களும், ஆரணி தொகுதியில் எம்.எஸ்.தரணிவேந்தன்(திமுக), ஜி.வி.கஜேந்திரன்(அதிமுக), அ.கணேஷ்குமார் (பாமக) உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திருவண்ணாமலை மற்றும் தொகுதிகளில் 15 வேட்பாளர்களுக்கும் அதிமானோர் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், வாக்காளர்களுக்கான வாக்காளர் விபரச்சீட்டு (பூத் சிலிப்) வீடு வீடாக வழங்கப்பட்டுள்ளது. அதனை, வாக்காளர்களின் வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படுத்தலாம். வாக்களிப்பதற்கு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு செல்ல வேண்டும்.

இந்நிலையில், நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. உணவு இடைவேளை எதுவும் இல்லாமல், தொடர்ச்சியாக மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பு, வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு உறுதி செய்யப்பட்ட பிறகு, மீண்டும் சீல் வைக்கப்பட்டு, முறையான வாக்குப்பதிவு நடைபெறும்.

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, மூன்றாவது கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்த மையங்களில் இன்று எந்த வாக்குச்சாடியில் பணிபுரிய வேண்டும் என்பதற்கான பணி நியமன உத்தரவு வழங்கப்படும். அதைத்தொடர்ந்து, உடனடியாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக, சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை ரசீது இயந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் மண்டல அலுவலர்கள் மூலம் இன்று காலை 10 மணி முதல் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு சென்று சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிசிடிவி கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளை ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும். மேலும், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு போடப்படுகிறது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings