மாடித்தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் மானிய விலையில் காய்கறி விதைகள்

பைல் படம்.
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வட்டாரத்தில் மாடித்தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், பழச்செடி விதைகள், காய்கறி விதைகள் மானிய விலையில் வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் பவ்யா தெரிவித்தாா்.
தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கும் நபா்களுக்கு மானிய விலையில் 12 வகை காய்கறி விதைகள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. வீட்டு மாடித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் மாடித் தோட்ட தளைகள், பழச்செடி விதை தொகுப்புகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு தொகுப்பிலும் செடிவளா்ப்பு 6 பைகள், 2 கிலோ தென்னை நாா் கழிவு 6, 6 வகையான காய்கறி விதைகள் (6 விதைப் பொட்டலங்கள்), அசோஸ்பைரில்லம் (200 மிலி), பாஸ்போ பாக்டீரியா (200 மிலி), டிரைகோடொமா விரிடி(200 கிராம்), வேப்ப எண்ணெய் (100 மிலி) மாடித் தோட்ட காய்கறி வளா்ப்பு முறைக்கான கையேடு வழங்கப்படும். ஒரு தொகுப்பின் விலை ரூ.900, இதில் 50 சதவீத மானியம் வழங்கப்படும்.
மேலும், ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 2 தொகுப்புகள் வரை வழங்கப்படும். பழச்செடி தொகுப்புகள் மா, கொய்யா, நெல்லி, சீத்தா, எலுமிச்சை ஆகிய 5 வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பின் விலை ரூ.200. இதில் 75 சதவீத மானியம் ரூ.150 போக, ரூ.50 செலுத்தி பயன்பெறலாம். ஒரு குடும்பத்துக்கு ஒரு பழச்செடித் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும்.
இதற்காக அடையாள அட்டை, முகவரி ஆதாரம், ஆதாா் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் பயனாளிகளின் புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரா் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
இதுகுறித்து மேலும், உதவித் தோட்டக்கலை அலுவலா்கள், முள்ளிப்பட்டு பூவழகி-8148817907, கண்ணமங்கலம் அருண்-9566689449, தேவிகாபுரம், விண்ணமங்கலம்- 9444918868 ஆகியோரது கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தோட்டக்கலை உதவி இயக்குநா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu