ஆரணி விசிக மாவட்ட செயலாளர் இடைநீக்கம்
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்
ஆரணியில் காவலர்களை இழிவாக விமர்சித்து கொலை மிரட்டல் விசிக மாவட்ட செயலாளர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் தலைமறைவானர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை இடைநீக்கம் செய்து விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 26 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதியின்றி ஊர்வலமாக சென்றனர். அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். ஆனால், அதை கண்டுகொள்ளாத விசிகவினர்,. காவல் நிலையம் அருகே சென்று, காவல்துறையினரை ஒருமையில் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது.
இதையடுத்து காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். இதனால், பகலவன் உள்பட பலர் தலைமறைவான நிலையில், 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
தனிப்படை போலீசார் தொடர்ந்து மற்றவர்களை தேடி வந்த நிலையில் நேற்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கட்சியின் நலன் மற்றும் மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு, அவற்றின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளை மீறாமல் செயலாற்றுவது இன்றியமையாததாகும். அவ்வாறின்றி சிலர் பொதுவெளியில் நடந்து கொண்ட போக்குகள் கவலையளிப்பவையாக உள்ளன. ,இதற்கு பொறுப்பேற்க வேண்டிய மாவட்ட செயலாளர் பகலவன் மூன்று மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
இது குறித்து முழுமையாக விசாரிப்பதற்கு மாநிலப் பொறுப்பாளர் ஒருவர் தலைமையில் விசாரணைக் குழு பின்னர் நியமிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu