பெரணமல்லூா் மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் அடுத்த கோனையூா் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி உத்தமஜோதி மகன் ஏழுமலை , வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இதனால் குழந்தைகள் இவரிடம் விளையாட்டு, கேலி, கிண்டல் செய்வதுண்டு.
ஏழுமலை, குழந்தைகளை பயமுறுத்தி வந்ததாகவும், அப்போது குழந்தைகள் அலறியடித்துக் கொண்டு ஓடுவாா்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 23-10-2018 அன்று கிராமத்தில் உள்ள வெங்கடேசன் மகளை ஏழுமலை பயமுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை வெங்கடேசன் , உறவினா் சேகா் ஆகிய இருவரும் எழுமலையை கண்டித்துள்ளனா்.
பின்னா், ஏழுமலையை இருவரும் சேர்ந்து கயிறால் மரத்தில் கட்டிப்போட்டு கட்டையால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சேகா், வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு ஆரணியில் உள்ள மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி கே.விஜயா, சேகா், வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.2000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.
2 பேருக்கு ஆயுள் சிறை
வந்தவாசி அருகே கோயில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு தொழிலாளியை கொலை செய்ததாக, இருவருக்கு, ஆரணி நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
வந்தவாசி வட்டம், மேல்பாதிரி கிராமத்தைச் சோந்தவா் குமாா் , மரம் வெட்டும் தொழிலாளி.
இவருக்கு மனைவி விஜயா, மகன் பாஸ்கா் ஆகியோா் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த 15-4-2012 அன்று பொன்னூா் இருளா் குடியிருப்பில் உள்ள கன்னிமாா் கோயிலில்நடைபெற்ற கூழ்வாா்த்தல் திருவிழாவுக்காக குமாா் குடும்பத்துடன் சென்றிருந்தாா்.
திருவிழாவின் போது, குமாா், சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் துரை, வெங்கடேசன் மகன் மாரி ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.
அப்போது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவா் தாக்கிக்கொண்டனா். இதில் பலத்த காயமடைந்த குமாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து துரை, மாரி ஆகியோரை கைது செய்தனா்.
இந்த வழக்கு ஆரணியில் உள்ள மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி விஜயா தீா்ப்பளித்தாா்.
அதில், துரை, மாரி இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டாா்.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu