நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை எடை போட லஞ்சம்: இருவர் கைது
மாதிரி படம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள பையூர் கிராமத்தில் ஆரணி வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சேவூர் அடுத்த சாணார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விளைந்த 62 நெல் மூட்டைகளை விற்பனைக்காக எடுத்துச் சென்றுள்ளார். நெல் கொள்முதல் நிலையத்தின் வேளாண் சங்க செயலாளராக உள்ள ஜெகதீஸ்வரன், ஒரு மூட்டைக்கு ஒன்றுக்கு 45 ரூபாய் வீதம் 2,790 ரூபாய் பணத்தை லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே நெல் மூட்டைகளை எடை போட்டு ரசீது வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
பணத்தை கொடுக்க விரும்பாத ஆனந்தராஜ், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர். அவரிடம் ஜெகதீஸ்வரன் லஞ்சமாக கேட்ட 2790 ரூபாய்க்கான பணத்தில் ரசாயனம் தடவி கொடுத்து அனுப்பினார். அந்தப் பணத்தை நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த கிடங்கு பாதுகாவலர் ராஜேந்திரன் என்பவர் மூலம் ஜெகதீஸ்வரன் இன்று பிற்பகல் பெற்றுக்கொண்டார்.
கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மைதிலி, அன்பழகன் ஆகியோர் கொண்ட குழுவினர் மறைந்து இருந்து ஜெகதீஸ்வரன், ராஜேந்திரன் ஆகியோரை லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடித்தனர்.
இதையடுத்து, ஜெகதீஸ்வரன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரிடம் சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர்களிடம் இருந்து கணக்கில் வராத 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த தொகை அனைத்தும் நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளிடம் இருந்து லஞ்சமாக பெற்றது என்பது தெரியவந்தது. அதன்பின்னர் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக இருவரையும் லஞ்சம் ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu