விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 19 பேருக்கு ஜாமீன்- திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 19 பேருக்கு ஜாமீன்- திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
X
போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 19 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம் உள்ளது. அதன் அருகில் உள்ள தனி நபருக்கு சொந்தமான கடையின் சுவரை உடைத்தது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரையும் அழைத்து பேசினர்.

அப்போது சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளராக இருந்த பாஸ்கரன் மற்றும் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் ஜாமீனில் வந்த அவர்கள் போலீஸ் நிலையம் அருகிலேயே போலீசாரை அவதூறாக பேசியதாக மாவட்ட செயலாளராக இருந்த பாஸ்கரன் உள்பட 19 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 29). இவர், சாத்தனூரில் உள்ள மீன் வளர்ச்சி கழக அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் பரானா (20).

இவர், திருவண்ணாமலை உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனால் இவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

தொடர்ந்து அவர்கள் காவல் நிலையத்தில் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து காதல் ஜோடிகள் அங்கிருந்து சென்றனர்.

Tags

Next Story