திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்:
கோப்பு படம்
ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே பள்ளிக்கூடம் தெரு முகப்பில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் ஆரணி பகுதி முகவராக ஆரணி வெற்றிலை காரர் தெருவை சேர்ந்த ஜோதிகுமாரின் மகன் பாலகுமரன் (வயது 24) என்பவர் தனியார் ஒப்பந்தத்தில் ஏ.டி.எம். மையத்தின் பொறுப்பாளராக கவனித்து வருகிறார்.
இந்த ஏ.டி.எம். மையத்தில் கடந்த 16-ந் தேதி அதிகாலை ஒருவர் நுழைந்து கண்ணாடி அறைகளை சேதப்படுத்தி பணம் திருட முயற்சி செய்துள்ளார். அன்று காலை பணம் நிரப்ப வந்த பாலகுமரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்ததில் ஏ.டி.எம். மையத்தில் பணம் திருட முயற்சி செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆரணி டவுன் காவல் நிலையத்தில் பாலகுமரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் ரகு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.. மேலும் கண்காணிப்பு கேமராவில் உள்ள உருவங்களை ஆய்வு செய்ததில் ஆரணி கார்த்திகேயன் சாலை நகராட்சி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் கலையரசன் (30) என்பது தெரிந்தது. இதையடுத்து இன்று காலை அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு அருகே சி.பி.சி.ஐ.டி., போலீஸ் போல நடித்து, ஆவின் அதிகாரியிடம், மொபைல் போன் பறித்த வாலிபர் கைது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வெங்கட்ராயன்பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ், திருவண்ணாமலை ஆவின் அலுவலக அதிகாரி. நேற்று இரவு பணி முடிந்து, பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
பாப்பந்தாங்கல் கூட்ரோடு அருகே, ஒரு வாலிபர் பைக்கை நிறுத்தினார். 'மோரணம் காவல்நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி., பிரிவில் பணிபுரிகிறேன். மொபைல் போனில், 'சார்ஜ்' இல்லை. ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க, உங்கள் மொபைல்போனை கொடுங்கள் என, கூறியுள்ளார்.
ரமேஷ் மொபைல் போனை கொடுத்துள்ளார். மொபைல் போனில் பேசிக்கொண்டே, சிறிது துாரம் நடந்து சென்று, அங்கு நிறுத்தியிருந்த பைக்கில் ஏறி தப்பினார்.
இது குறித்து ரமேஷ் மோரணம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில், ஏமாற்றியது மோரணம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், என தெரிந்து, அவரை இன்று கைது செய்தனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல் நிலையம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வடஅரசம்பட்டு பகுதியை சேர்ந்த எழில்ராஜன் என்பவரின் மகன் அருணாச்சலம் என்ற அருண் (வயது 23) என்பவர் ஆபாசமாக கத்திக்கொண்டு, போக்குவரத்திற்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து உதவி ஆய்வாளர் முனீஸ்வரன் வழக்குபதிவு செய்து, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu