திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
X

ஆரணியில் பெய்த பலத்த மழையால் சாலையில் தேங்கிய மழைநீர் 

திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, போளூர், கலசப்பாக்கம், செங்கம், கீழ்பெண்ணாத்தூர், வந்தவாசி, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனத்த மழை பெய்து வந்தாலும் திருவண்ணாமலை நகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மழையளவு குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை நகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வேங்கிக்கால், நல்லவன்பாளையம், அடி அண்ணாமலை, தென்மாத்தூர், கீழ் நாச்சி பட்டு, நொச்சிமலை, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது.

நேற்று பெய்த பலத்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

சேத்துப்பட்டில் 58.4 மி.மீ. மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 58.4 மி.மீ. பதிவானது.

இதுதவிர, திருவண்ணாமலையில் 11.3, கீழ்பென்னாத்தூரில் 21.8, தண்டராம்பட்டில் 17, போளூரில் 15, கலசப்பாக்கத்தில் 12, ஜமுனாமரத்தூரில் 8, ஆரணியில் 17.2, செய்யாற்றில் 30, வெம்பாக்கத்தில் 10.5 மில்லி மீட்டா் மழை பதிவானது.

ஆரணியில் மழையினால் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி

ஆரணி நகரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் தேங்கியது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

ஆரணியில் நேற்று சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் ஆரணி பழைய பேருந்து நிலையம் மற்றும் காந்தி சாலை பகுதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் ஓடத் தொடங்கியது.

இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் பழனி, துப்புரவு ஆய்வாளர் வடிவேலு, நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனடியாக அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு உடனிருந்து நடவடிக்கை மேற்கொண்டு நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உடனடியாக பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் அடைப்புகளை அகற்றி சீரமைப்பு செய்தனர். இதனால் தேங்கி இருந்த கழிவு நீர் உடனடியாக அகற்றப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!