ஆரணி அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவர் சிக்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் பேரூராட்சியில் பகுதியில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் தொடர் நகை மற்றும் பணம் திருட்டு சம்பவம் அதிகளவில் நடைபெற்று வந்தது.
இதனால், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவின் பேரில், கண்ணமங்கலம் காவல் நிலைய காவல்துறை காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று கண்ணமங்கலம் பேருந்து நிலையம், புதுப்பேட்டை அருகே கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா தலைமையில், காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு வந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை மடக்கி பிடித்து, வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் லிப்ட் கேட்டு வந்த வாலிபர், முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த கண்ணமங்கலம் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கிடுக்குபிடி விசாரணை செய்தனர்.
விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன் (43) என்பதும் கண்ணமங்கலம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் விசாரணையில் தெரிய வந்தன. மேலும், முருகன் மீது வழக்கு பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu