ஆரணி அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருட்டு

ஆரணி அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருட்டு
X

ஆரணி அருகே வீட்டில் நகை திருட்டு ( மாதிரி  படம்)

ஆரணி அருகே வீட்டின் கதவை உடைத்து பத்து பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

ஆரணியை அடுத்த மருசூா் கிராமத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், தனியாக இருந்த பெண்ணின் கழுத்திருந்த தங்கச் சங்கிலி என சுமாா் 10 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மருசூா் கிராமம் ரோட்டு தெருவைச் சேர்ந்த தட்சிணாமூா்த்தி மனைவி கற்பகம் . தட்சிணாமூா்த்தி சில மாதங்களுக்கு முன் காலமாகிவிட்டாா். மகள் அரலீஸ்வரிக்கு திருமணமாகி திமிரியில் கணவருடன் வசித்து வருகிறாா். கற்பகம் மட்டும் தற்போது வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில் வழக்கம் போல் மூதாட்டி கற்பகம் தனது வீட்டின் கதவுகளை பூட்டிக்கொண்டு தனியாக உறங்கி உள்ளார் அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கதவுகளை மர்ம நபர்கள் உடைத்து வீட்டிற்குள் வந்ததாக கூறப்படுகிறது அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி முகத்தில் மீது மயக்க மருந்து தெளித்து மயக்கம் அடைய செய்துள்ளதாகவும் தெரிகிறது.

பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த சுமாா் 5 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருள்கள், ரொக்கம் ரூ.12,000 ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த கற்பகத்தின் கழுத்தில் இருந்த சுமாா் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனா்.

இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் கற்பகம் புகாா் அளித்தாா்.

இதன் பேரில், டிஎஸ்பி ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளா் ராஜாங்கம், உதவி ஆய்வாளா் ஷாபுதீன் மற்றும் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், விரல் ரேகை நிபுணா் தேவிபிரியா வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

கிராமத்தில் பூட்டை உடைத்து வீட்டில் நுழைந்து நகைகளை திருடிய சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story