வெளிநாட்டிலிருந்து வந்த தந்தை மகளுக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி
காங்கோவில் இருந்து ஆரணி திரும்பிய பெண்ணுக்கும் அவரது தந்தைக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
காங்கோ நாட்டில் இருந்து கடந்த 12-ந் தேதி இந்தியா திரும்பிய திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறையினர் அறிவித்தனர்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதலில் அவரது தந்தை ராஜனுக்கும், அதனைத்தொடர்ந்து தம்பி சதீசுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 2 பேரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் 3 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்வதற்காக அவர்களின் மரபணு சோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்று காங்கோ நாட்டில் இருந்து திரும்பிய சங்கீதாவிற்கும், அவரது மூலமாக அவரது தந்தைக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், ஆரணி உதவி கலெக்டர் கவிதா, செய்யாறு சுகாதார துணை இயக்குனர் சங்கீதா ஆகியோர் உத்தரவின் பேரில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா, பையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சரவணன், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கு.இந்திராணி, இல. சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் அப்பகுதியில் சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆரணி உதவி கலெக்டர் கவிதா கூறுகையில் ஒமைக்ரான் தொற்று பாதித்ததாக கூறப்படுகிற பையூர் அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதிகளில் அநாவசியமாக தேவையின்றி யாரும் செல்ல வேண்டாம். கண்டிப்பாக வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து செல்லுங்கள், அப்பகுதியை சுற்றி உள்ளவர்கள் கண்டிப்பாக அதிகமாக வெளியே சுற்றாதீர்கள், வெளியே வருவதை தவிர்த்து கொள்ளுங்கள். ராஜனுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. எனவே, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu