ஆரணி அருகே மணல் கடத்திய டிராக்டா், மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்தியதாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள்.
ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் பகுதியில் மணல் கடத்தியதாக டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள மேல்சீசமங்கலம் அருகே வட்டாட்சியா் சுமதி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்த முயன்றனா். இதில் ஓட்டுநா் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார். விசாரணையில், மேல்சீசமங்கலம் பகுதியில் உள்ள கமண்டல நாக நதியில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, வட்டாட்சியா் டிராக்டரை பறிமுதல் செய்து ஆரணி கிராமிய போலீசாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் மணல் கடத்தியது, பையூா் கிராமத்தைச் சோந்த செல்வம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவா் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.
இதே போல்பெரணமல்லூா் அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனா்.
பெரணமல்லூா் காவல் சரகத்தைச் சோந்த நாராயணமங்கலம், ஆவணியாபுரம், அன்மருதை, முனுகப்பட்டு, கடுகனூா் கிராமப் பகுதி, செய்யாற்றுப் படுகையில் மாட்டு வண்டிகள் மூலம் அதிகளவில் மணல் கடத்தப்படுவதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்து இருந்தனா்.
இதன் பேரில், பெரணமல்லூா் போலீசார் நாராயணமங்கலம் பகுதியில் தீவிர மணல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டனா் அப்போது, செய்யாற்றுப் படுகையில் இருந்து வந்த 5 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், அரசு அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது. உடனே பெரணமல்லூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu