உண்டியலில் சேமித்த பணத்தை பள்ளிக்கு வழங்கிய மாணவி

தலைமையாசிரியர் மாணவி பிரியதர்ஷினிக்கு விருது வழங்கி பாராட்டினார். உடன் மாணவியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள்.
ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் மாணவி ஏ.பிரியதர்ஷினி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது பள்ளியின் தலைமை ஆசிரியர் சீ.தனஞ்செழியனிடம் பள்ளி மாணவி பிரியதர்ஷினி தானும் பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து கடந்த ஓராண்டாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தைத் தலைமை ஆசிரியரிடம் கொடுத்து அந்தப் பணத்தை பள்ளி மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். உண்டியலில் 6 ஆயிரத்து 175 ரூபாய் இருந்தது.
மாணவியின் இந்தச் செயல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சிறு வயதிலேயே தான் படிக்கும் பள்ளிக்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்ற மாணவியின் நல்லெண்ணத்தைப் பாராட்டும் விதமாக அந்த மாணவிக்கு சேவை சுடரொளி விருதை வழங்கி தலைமைஆசிரியர் பாராட்டினார்.
விழாவில் பள்ளியின் பெற்றோர் கழகத் தலைவர் பாலாஜி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிக்கு விருது வழங்கி கவுரவித்தார். உதவி தலைமை ஆசிரியர் இளையராஜா வரவேற்றார்.மாணவியின் பெற்றோரும் கௌரவிக்கப்பட்டனர்.
பள்ளியின் ஆசிரியர்கள் பொதுமக்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவியைப் பாராட்டினர். முடிவில் தமிழ் ஆசிரியை தமிழ்செல்வி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu